முருகபூபதி-அற்றைத்திங்கள்  அவ்வெண்ணிலவில்
அலையோர   வெண்மணலில்
நாம்  பதித்த  கால்   தடங்கள்
இல்லாத   இடங்கள்  இல்லை

விஜயலட்சுமி சேகர் நெய்தலில் கடலின் நடுவே போர்ட் சிட்டி - குறிஞ்சியில் மலையடிவாரத்தில் லயன் சிட்டி கடல் மட்டும்  மாறிவிடாத   காலிமுகம் \கடலும்    கடல்  சார்ந்த  பிரதேசமும்    நெய்தல்  என்று   சங்க இலக்கியம்     கூறுகின்றது.    இலங்கையில்     ஐந்து            திணைகளும் ( குறிஞ்சி,   நெய்தல்,   மருதம்,  முல்லை,  பாலை )    இருக்கின்றனவா...? என்று   ஆராய்ந்தால்  பாலை    ( எதுவும்  பயிரிட  முடியாத  நிலம் ) இல்லையா    என்று    நாம்  யோசிப்போம்.  . ஆறாம்    திணை    நவீன    தமிழ்  இலக்கியத்தில்   பிறந்துள்ளது. நான்   பிறந்த  நீர்கொழும்பும்  இலங்கைத்தலைநகரும்  நெய்தல் நிலப்பிரதேசங்கள்.   எங்கள்  ஊரில்  கடலின்  ஓயாத அலையோசையை   கேட்டவாறே  பிறந்து -  தவழ்ந்து -  வளர்ந்து வாழ்ந்தமையினால்  கடலின்    மீது   தீராத  காதல். ஆனால்   -  சுனாமி  கடற்கோள்  வந்தபொழுது  எனக்கு  கடல் மீது கடுமையான   வெறுப்பு  தோன்றியது.    அவ்வாறே   1978  இல் கிழக்கில் சூறாவளி  வந்தபொழுது  காற்றின்  மீது வெறுப்புத்தோன்றியது.    மலையகத்தில்  மண்  சரிவுகளும் வெள்ளப்பெருக்கும்   ஏற்படும்  வேளைகளில் தண்ணீர்  மீது  ஆத்திரம் வருகிறது.

இயற்கையுடன்   கோபித்து  என்ன    பயன்...?  அது  தனது  வேலையை செய்துகொண்டுதானிருக்கும்.   ஆனால் ,  இயற்கை   அநர்த்தங்கள் வரும்வேளையில்    அதனையும்  அரசியலாக்கும்  பெரிய மனிதர்களிடத்தில்   யார்தான்   கோபிப்பது....? இதனை    எழுதும்பொழுது  ஆந்திராவில்  அமராவதி  என்ற  பெயரில் புதிய   நகரம்  நிர்மாணிக்க  இதுவரை   33  ஆயிரம்  ஏக்கர்  விவசாய நிலம்   கையகப் படுத்தப்பட்டுள்ளது  எனச்சொல்லப்படுகிறது. அரசுகள்  நினைத்தால்  எதுவும்  செய்யலாம்.  அதிகாரம்  அதன் கைகளில்   இருக்கும்  வரையில்  எந்தவொரு  அரசும்  எதுவும் செய்யும். இலங்கையில்   காலிமுகம்  வரலாற்று  பிரசித்தி  மட்டுமல்ல அரசியல்    பிரசித்தமும்  பெற்றது.   இந்த  காலிமுகத்துடன்  எனக்கு உணர்வுபூர்வமான    சிநேகம்  நீடிக்கிறது.   நாட்டை   விட்டு புலம்பெயர்ந்தாலும்   இலங்கை    செல்லும்  வேளைகளில் காலிமுகத்தை    நிச்சயம் தரிசிப்பேன்.   அல்லது  அதனைக்கடந்து செல்வேன்.

1974   களில்  இந்த  காலிமுகத்தில்  கடற்காற்றையும்  சுவாசித்து வெய்யிலிலும்   காய்ந்திருக்கின்றேன்.   அந்த  காலிமுகத்தின்  பசுமை படிப்படியாக   மங்கத்தொடங்கிவிட்டது.   காலிமுகம்  பற்றியும்  அங்கு கிட்டிய    அனுபவங்கள் -   தரிசனங்கள்  பற்றியெல்லாம்  ஏற்கனவே காலிமுகம்  என்ற    தலைப்பில்  சொல்ல  மறந்த  கதைகள்  நூலில் எழுதியிருக்கின்றேன்.

ஸ்ரீமா - என். எம். - பீட்டர் - கூட்டு  முன்னணி   ஆட்சி  1970  இல் வந்தபொழுது    காலிமுகத்தில்  அமைந்த  பாராளுமன்றம்  தேசிய அரசுப்பேரவை என்ற  பெயரை   எடுத்தது.  தலையணை   ஒன்றுதான். ஆனால் -   அதன்  உறைகள்  மாறிக்கொண்டிருக்கும்  என்பார்கள். இதுதான்    அரசியலில் அரசுகளிலும்   இன்றளவும்     நடக்கிறது.

1921   இல்    பிரித்தானியரின்  காலத்தில்  அந்தக்கட்டிடத்தின் வரைபடம்  தயாராகி  நிர்மாணிக்கப்பட்டு,  அதன்பின்னர்  ஒன்பது ஆண்டுகாலம்   கழிந்து  1930   இல்    அன்றைய  ஆளுனர்  சேர். ஹேர் ஸ்டான்லி   என்பவரால்  திறந்துவைக்கப்பட்டது.   முதலில்  இங்கு சட்டசபையும்  இயங்கியது.  பல  மலையகத்தமிழ்  தலைவர்கள்  இங்கு    உரையாற்றியிருக்கிறார்கள்.   ஆனால் -  நாடற்றவர்  என்ற சட்டமூலம்    வந்த பின்னர்  அந்த  எண்ணிக்கை   குறைந்து,   நியமன நிலைக்குத்தள்ளப்பட்டது.    யூ. என். பி.  வந்தால்  தொண்டமான், சுதந்திரக்கட்சி   வந்தால்  அஸீஸ்    என்ற  நிலைதான்    தொடர்ந்தது. ஆனால் -  வடக்கிலும்  கிழக்கிலுமிருந்து  தமிழ்த்தலைவர்கள் தேர்தலில்   நின்று  அங்கு  வந்துகொண்டிருந்தார்கள். அமைச்சர்களானார்கள்.   சத்தியாக்கிரகமும்  செய்தார்கள்.   தலையில் அடிவாங்கி    இரத்தம்  சிந்தினார்கள்.   ஈ.எம்.வி.நாகநாதன்  என்ற தலைவரின்   தலைக்கு  இரும்புத்தலை   என்றும்  பெயர் சூட்டப்பட்டது.

அவ்வேளையில்   அந்த  பாராளுமன்றத்தினுள்  இருந்து அந்தப்போராட்டத்தை   எள்ளி நகையாடினார்  பண்டாரநாயக்கா. 1970   இல்  அதிகப்பெரும்பான்மையுடன்  ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சி சமாஜிகளினதும்    கம்யூனிஸ்ட்டுகளினதும்  ஆதரவுடன்  பதவிக்கு வந்ததும்    அப்பொழுது   தோல்வி  கண்ட  ஐக்கிய  தேசியக்கட்சி எதிர்க்கட்சி    ஆசனங்களுக்குச்சென்றபொழுது  அதன் தலைமைப்பொறுப்பை    கட்சியின்  தலைவர்  டட்லி  சேனாநாயக்கா ஜே. ஆருக்கு    விட்டுக்கொடுத்தார்.

ஜே. ஆர். சாணக்கியன்.    அத்துடன்  பாரிஸ்டர்.   பாராளுமன்றத்தின் முதல்   அமர்விலேயே   அவர்  தமது  கட்சிக்கு  கிடைத்த வாக்குகளின்   எண்ணிக்கையை    அறிவித்தார். கூட்டிக்கழித்துப்பார்த்தால்    சுதந்திரக்கட்சியை   விட  அதிகப்படியான    வாக்குகள்  பெற்றது  ஐக்கிய  தேசியக்கட்சிதான் என்று   சொன்னார்.   சொன்னதுடன்  அவர்  நிற்கவில்லை.   மீண்டும் தேர்தல்    வந்து   தாம்  வெற்றிபெற்றால் விகிதாசாரப்பிரதிநிதித்துவத்தை    கொண்டு   வருவோம்  என்றார்.

அவர்  நினைத்தது  நடந்தது.   இன்று  அதனை  மாற்றுவதா...? வேண்டாமா ...? என்று    அரசியல்  கட்சிகள்  தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றன.    ஜே. ஆர்.  அதுமட்டுமா  செய்தார் நிறைவேற்று   அதிகார  ஜனாதிபதி  ஆட்சி  முறையையும் அறிமுகப்படுத்தி    தாமே  அந்த  அதிகாரத்தின்  முதல்  அதிபராகவும் வாழ்ந்து    மறைந்தார்.   இன்று  மைத்திரியின்  நல்லாட்சியில் அனைத்து   அமைச்சர்களும்  நிறைவேற்று  ஜனாதிபதிகள்தான்  என்று சொல்கிறார்   இரண்டரை  மாதங்களுக்கு  முன்னர்  பதவி   விலகிய முன்னாள்    ஜனாதிபதி.
இந்த  நிறைவேற்று  அதிகாரத்தை  குறைப்பதற்கும்  அரசியல் கட்சிகள்   இன்று  தலையை   பிய்த்துக்கொள்கின்றன. ஜே. ஆர்.   அத்துடன்  நிற்காமல்  கோட்டே   ஸ்ரீ    ஜெயவர்த்தன புரவுக்கும்    பாராளுமன்றத்தை இடம்  மாற்றினார். முன்னைய    பாராளுமன்றம்  ஜனாதிபதி  செயலகமாக  மாறியது.

இவ்வாறு    அந்த  காலிமுகம்  பல  வரலாறுகளை   தன்னகத்தே கொண்டு   நாளுக்கு  நாள்  அதன்  தோற்றப்பொலிவை  மாற்றிக்கொண்டிருக்கிறது.

1974    களில்  நீர்ப்பாசன  நெடுஞ்சாலைகள்  அமைச்சராகவிருந்த மைத்திரிபால    சேனநாயக்கா -  காலிமுக  வீதியை   அகலமாக்கும் திட்டத்தை    அன்றைய  பாராளுமன்றத்தில்  சமர்ப்பித்து  துரிதமாகவே    பிராந்திய  சிவில்  பொறியியல்  நிறுவனத்திடம்   (Territorial   Civil    Engineering  Organization - T.C.E.O ) ஒப்படைத்தார். காலிமுக  வீதி  அகலமாக்கும்  பணி   தொடங்கப்பட்டவேளையில் அங்கு    வேலை   செய்யும்  தொழிலாளர்களை   மேற்பார்வை   செய்ய தெரிவுசெய்யப்பட்டவர்களில்    நானும்  ஒருவன்.   எனக்கு  கிடைத்த முதல்   வேலை.  ஆனால்,   நிரந்தரமற்றது. வேலைக்குச்சென்றால்தான் சம்பளம்.

காலிமுகத்தில்   வந்து  கலக்கும்  பேரை   ஆற்றின்  அருகில்  அந்த நிறுவனத்தின்   தற்காலிக  கட்டிடம்.   அந்தப்பகுதியில்  அமைந்திருந்த இராணுவ    முகாமின்  ஒரு  கட்டிடமே  அலுவலகமாகவும் களஞ்சியச்சாலையாகவும்     மாறியது.  இந்தப்பகுதியிலேயே முன்னைய    ஆட்சியின்  பாதுகப்பு  அமைச்சும்  செயலாளரின் பணிமனையும்    அமைந்து  பின்னாளில்  உயர்  பாதுகாப்பு  வலயமாக  மாறியது .    இங்கிருந்த  கட்டிடம்  ஒன்றிலிருந்துதான்  முன்னர் வெளிநாட்டினர்    வடக்கிற்கு  செல்வதற்கான   அனுமதிப்பத்திரம்  (M.O.D. Clearance)  வழங்கப்பட்டது.    இவ்வாறு   கேந்திர  முக்கியத்துவம்   வாய்ந்திருந்த  இடத்தில்  முன்னர்  1974 காலப்பகுதியில்    பணியாற்றிய  அனுபவம்  சுவாரஸ்யமானது.  அக்காலப்பகுதியில்   தினமும்  பாராளுமன்ற  வளாகத்தில்  அமைந்த அமைச்சு    அலுவலகங்களுக்கு  செல்லும்  அமைச்சர்கள்  கார்களில் பவனிவருவதை    பார்ப்போம்.   அமைச்சர்கள்  சிலர்  காலையிலேயே நடைப்பயிற்சிக்கு    வரும்  காட்சிகளை    காண்போம்.   தந்தை செல்வநாயகம்     பெரும்பாலும்  மாலை    வேளைகளில்  வருவார். செல்லையா  குமாரசூரியர்  தினமும்  காலையில்   வருவார். ஒரு    நாள்  மாலை  மழை   வந்துவிட்டது.   தந்தை  செல்வா நனைந்துவிட்டார்.   அவரை    கைத்தாங்கலாக  அழைத்துக்கொண்டு காலிவீதியை    கடந்து  எமது  கட்டிடத்துக்குச்சென்றேன்.    அவர் பேசினாலும்   புரியாது.    அவ்வளவு  மென்மையான   குரல்.   அன்று அவர்   நாம்  கொடுத்த  காகிதங்களினால்  தமது  தலையை துடைத்துக்கொண்டார்.

அவரது   சாரதி  வீதியோரத்தில்  சற்றுத்தொலைவில்  காருடன் நின்றார்.    அவர்  தேடி வருவதற்குள்   தந்தையை   அழைத்து வந்துவிட்டேன்.    மழை    விட்டதும்  புறப்பட்டார்.   பிறிதொரு  நாள் இலங்கையின்    முதலாவது  பிரதமர்  பணிஸ்  மாமா  என்று  எம்மால் அழைக்கப்பட்ட   தகநாயக்காவுக்காக    பஸ்தரிப்பிடத்தில்  பஸ்ஸை மறித்து   நிறுத்தினேன்.   (இதுபற்றி  ஏற்கனவே   சொல்லமறந்த கதைகளில்    எழுதியிருக்கின்றேன் )  ஒரு  நாள்   மாலை   குமார்  பொன்னம்பலம்  காலிவீதியில்  மற்றும் ஒரு   காரை   துரத்திவந்து  நிறுத்தி -  அதிலிருந்தவருடன்  வாய்த்தர்க்கத்தில்   ஈடுபட்ட  காட்சியும்  பார்த்திருக்கின்றேன். அவரிடம்   பல  ரகத்தில்  கார்கள்  இருந்தன  என்பது  பரகசியம். ஆழிக்குமரன்  ஆனந்தன்  வந்து  தொடர்ச்சியாக  இரவு  பகலாக நடனமாடி   கின்னஸ்  சாதனை    நிகழ்த்தியதும்  காலிமுகத்தில்தான். அந்த   நிகழ்ச்சிக்கு  ஜே.ஆரும். வந்தார்.   குமார் பொன்னம்பலம்  வந்து   சில  நிமிடங்கள்  ஆழிக்குமரனுடன்  நடனமும்  ஆடி  அவரை உற்சாகப்படுத்தினார்.பல    சிங்களப்படங்களுக்கான  காட்சிகள்  காலிமுகத்திடலிலும் வீதியிலும்    பாராளுமன்ற  படிக்கட்டுகளிலும்  நடந்துள்ளன. காலிமுகத்தில்    அமைந்துள்ள Gall face Hotel   காலிமுகம்  போன்று பிரசித்தி   பெற்றது.   1960  களில்  எம்.ஜி.ஆரும்    சரோஜா  தேவியும் வந்து  தங்கியிருந்ததும்  இந்த  ஹோட்டலில்தான்.

ஸ்ரீமாவின்    ஆட்சிக்காலத்தில்  விலைவாசி  உயர்வை   எதிர்த்து தலைநகரின்    நாலாபுறமும்  இருந்து  பல்லாயிரக்கணக்கில்  மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம்  நடத்தி -  இறுதியில்  காலிமுகத்திடலில் கூடுவதற்கு   ஐக்கிய  தேசியக்கட்சி  ஏற்பாடு  செய்தது.   கொழும்பு தெற்கிலிருந்து    ஜே. ஆர் தலைமையிலும்  கொழும்பு  மத்தியிலிருந்து பிரேமதாசா    தலைமையிலும்  கொழும்பு  வடக்கிலிருந்து  வின்சன்ட் பெரேரா   தலைமையிலும்  பெரிய  ஊர்வலத்துக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது.

எமது    அலுவலகத்திற்கு  முதல்  நாள்  பிற்பகல்  வந்த  திடீர் உத்தரவினால்   வீதி  நிர்மாணிப்பு  வேலைகள்  உடனடியாக நிறுத்தப்பட்டன.    லொறிகளில்  பெரிய  மரக்குற்றிகளும்  முற்கம்பி சுருள்களும்    வந்து  இறங்கின.    துரிதமாக  காலிமுகத்திடல்  முற்கம்பி    வேலிகளினால்  மூடப்பட்டது.   மறுநாள்  நாம்  மாத்திரம் அதற்குள்    நின்று  வேலை    செய்ய    அனுமதிக்கப்பட்டோம். அன்று    காலை  பிரேமதாசா  தமது  காரை  தாமே   செலுத்திவந்து பாராளுமன்ற   முன்றலில்  இருந்து  நிலைமையை பார்த்தார் அன்றுதான் அவரை    சாரத்துடன்  கண்டேன். திட்டமிட்டவாறு   ஊர்வலம்  இங்கு  வரும்  என்று சொல்லிவிட்டுச்சென்றார்.    ஊர்வலம்  வந்தது.  ஆனால் -  பல இடங்களிலும்  ஊர்வலம்   பொலிசாரினால்  தடுக்கப்பட்டது.

நாம்   அந்த  முள்வேலிக்குள்  நின்றவாறு  தொலைவில்  மின்சார சபைக்கட்டிடத்தின்   மேல்    தளங்களில்  நின்றவாறு  மக்கள் ஊர்வலத்தை    பார்க்கும்  காட்சியை   கண்டோம். பிறிதொரு    சந்தர்ப்பத்தில்  எரிபொருள்  விலை   அதிகரிப்பை கண்டித்து    ஐக்கிய  தேசியக்கட்சி  பாராளுமன்ற  உறுப்பினர்கள்  சிலர் மாட்டுவண்டியில்    வந்து  இறங்கினார்கள்.    காலிமுகத்தை   கடந்து அவர்கள்  மாட்டு  வண்டிகளில்  சென்ற கண்கொள்ளாக்காட்சிகளையும்  கண்டு  ரசித்தோம். அதே   பாராளுமன்றத்திற்கு  ஒரு  சமயம்  தகநாயக்கா  ஆடைவிலை   உயர்வைக்கண்டித்து  கோவணத்துடன்  வந்த காட்சியை    மூத்த  தலைமுறையினர்  மறந்திருக்க மாட்டார்கள். காலி முகம்  காதலர்களின்  சொர்க்கபுரி.   பல  ஊர்களிலுமிருந்து காதலர்கள்    மட்டுமல்ல,   அவர்களின்  வண்ண   வண்ணக்குடைகளும்  வந்துவிடும்.   அந்தக்குடைகளுக்குள்  என்னதான்    செய்திருப்பார்கள்...? என்னதான்  பேசியிருப்பார்கள்...?

ஆராய   வேண்டாம்.   அந்தரங்கம்  புனிதமானது.

அந்தக்காட்சிகளையெல்லாம்    கண்டு  களித்த  அந்த  நாள்  ஞாபகங்கள்    காலிமுகத்திடலை   கடக்கும்பொழுதும்  எனது நினைவுக்கு   வரும்.   ஒரு  காலத்தில்  வெய்யில்  குளித்து நடமாடித்திரிந்து   வீதி   அமைத்தவர்களில்   நானும்  ஒருவன் என்பதனால்     அதன்  மீது  பவனிவரும்பொழுதெல்லாம்   இனம்புரியாத   பரவசம்  தோன்றுகிறது.

அந்த  காலிமுகத்திடலில்  -   அலையோர  மணலில்   நாம்  பதித்த கால்  தடங்கள்    இல்லாத  இடங்கள்  இல்லை.
முன்னைய    பாராளுமன்றத்தின்  முன்றலில்  முன்னாள்  தலைவர்கள்    சிலையாக  காட்சி  தருகிறார்கள்.   அவர்களின் தலையில்   நின்று  காகங்களும்  காலிமுகத்தின்  காற்றை சுவாசிக்கின்றன.

அவற்றின் சுதந்திரம் அந்தத் தலைவர்களின் நினைவு தினத்தில் பறிபோய்விடும். அந்த நினைவுதினங்களில் மாத்திரம்தான் மனிதர்களின் மாலைகள் அங்கு தோன்றும். மற்றும் வேளைகளில் காகங்களுக்குச்சொந்தமானவை அந்தத் தலைவர்களின் தலைகள். வல்லரசுகள்  - வளர்முக நாடுளை   கவருவதற்கு    என்னவெல்லாமோ  செய்யும்.  எதிலும்  பூகோள  நலன்  இருக்கும்.  வளர்முகநாடுகளின் இயல்பே  கையேந்துவதுதானே.

ஒரு   வல்லரசு  ஒன்றைத்தந்தால் -  அடுத்த  வல்லரசு  மற்றும் ஒன்றைத்தருவதற்கு   தயாராகிவிடும்.  சீனா  - கொழும்பு டொரிங்கடனில்    பிரமாண்டமான  மாநாட்டு  மண்டபத்தை பண்டாரநாயக்கா    ஞாபகார்த்த  மாநாட்டு  மண்டபம்  என்ற  பெயரில் தந்தால் -   அன்று  அதன்  மாற்றுக்குரலாக  திகழ்ந்த  சோவியத் ரஷ்யாவும்   தனது  பங்கிற்கு  ஏதும்  செய்யவேண்டாமா...?  செய்தது.சோவியத்தின்   புகழ்பெற்ற  சிற்பி  லெவ்  கேர்பில்  என்பவரினால் வடிவமைக்கப்பட்ட    பெரியதொரு   பண்டாரநாயக்கா  சிலையை வழங்கியது.  அந்தச்சிலையும்  காலிமுகத்தில்  வந்து  இறங்கியது. இருக்கிறது.    ஒரு  பாடசாலை  மாணவன்  அமரர் பண்டாரநாயக்காவின்    ஒளிப்படத்துடன்  அந்தச்சிலைக்கு  அருகில் சென்று  சிலையையும்  படத்தையும்  ஒப்பிட்டுப்பார்த்தானேயானால் ஆழ்ந்து    யோசிப்பான்.   அவன்  என்ன யோசிப்பான்...? என்று  நான் சொல்லவில்லை. காலிமுகம்  செல்பவர்கள்  நேரில்  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியா  வடக்கிற்கான  ரயில்  பாதைகளையும்  அமைத்துக்கொடுத்து   ரயில்  நிலையங்களையும்  நிர்மாணித்தால் சீனாவும்    தன்  பங்கிற்கு  எதனையாவது  செய்துகொடுக்க வேண்டும் அல்லவா. ஆம்  செய்யத்தொடங்கியது. அதன்    பெயர்  Port City. முன்னாள்   அதிபர்  ராஜபக்ஷ   2015  ஜனவரி 8  ஆம்  திகதி  நடந்த  தேர்தலில்   தோல்வியடைவதற்கு  முன்னதாக  சில  மாதங்களுக்கு முன்னர் சீனாவின்  ஆதரவுடன்  2014  செப்டெம்பரில்    ஃபோர்ட் சிட்டியின்   நிர்மாண    வேலைகள்  சம்பிரதாயபூர்வமாக தொடங்கப்பட்டது. சீன   அதிபர்  ஷன்  பிங்    கலந்துகொண்டார். சீனா  கொம்யூனிக்கேஷன்  கம்பனி  லிமிட்டட்  நிறுவனத்தின் அங்கத்துவ    நிறுவனமான C H E C  கொழும்பு    போர்ட்   சிட்டி கொழும்பு லிமிட்டட்  நிறுவனம்  அதன்  நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கும்   உட்கட்டமைப்பு  வசதிகளை   வழங்கவும் பொறுப்பேற்றதாக    செய்தி  வெளியானது.    நிர்மாணிக்கப்படும்  இந்த பேர்ட்  சிட்டியையும்   இந்தப்பயணத்தில்  சென்று  பார்த்தேன்.

சீனாவிலிருந்து    வருகைதரும்  தொழிலாளர்கள்  கடும் உழைப்பாளிகள்   என்பதை  பண்டாரநாயக்கா  சர்வதேச  மாநாட்டு மண்டபம்   அமைக்கும்பொழுது  அறிந்தோம்.  அதன் கட்டுமானப்பணிகளுக்கு    வந்திருந்த  ஒரு  சீன  தொழிலாளி நாளொன்றுக்கு    தன்னந்தனியனாக  நூற்றுக்கணக்கான  கற்களை வைத்து    சீமெந்து  பூசிவிடும்  ஆற்றல்  மிக்கவராக  இருந்தார்.   அவர் பின்னர்    பாராட்டிக்கௌரவிக்கப்பட்டதாகவும் அறியக்கிடைத்தது.

முன்னைய  அதிபர்  சீனாவையும்  நம்பினார் -  சோதிடர்களையும் நம்பினார்.   ஆனால்,  சீனா   இந்த  போர்ட்  சிட்டி  விவகாரத்தில் கைவிடவில்லை. இன்று  பல்லாயிரம்  கோடி   செலவில் நிர்மாணிக்கப்படும்    அந்த  காலிமுக  நவீன  நகரமும்  அரசியலாகி  விவகாரமாகியிருக்கிறது.    இங்கும்  உள்நாட்டு  அரசியல் மாத்திரமன்றி    சர்வதேச  அரசியலும்  நுழைந்துவிட்டது. போர்ட்  சிட்டியை  பார்த்தபொழுது  மலையகத்தில்  மீரியபொத்த மண்சரிவில்   வீடுகளை    இழந்து  நடுத்தெருவுக்கு  வந்த மலையக மக்களினதும்  வலிகாமத்தில்  தமது  பூர்வீக  நிலங்களையும் வீடுகளையும்   இழந்துவிட்டு  தமது  காணிகளை  எல்லை தெரியாமல் தேடிக்கொண்டிருக்கும்  தமிழ்  மக்களினதும்  அவலம் நிரம்பிய   காட்சிகள்தான்  மனக்கண்ணில்  தோன்றியது. இலங்கை   அரசியலில்  அந்த  அழகிய  காலிமுகமும்  பசுமையான காலிமுகத்திடலும்    தனது  இயல்பான  சோபையை    படிப்படியாக இழந்துகொண்டே   வருகிறது. வண்ணக்குடைகளுக்குள்    அமர்ந்து   அந்த நாட்களில்  காதலித்தவர்கள்    மணம்  முடித்திருந்தால்  ( ? )  தமது  சந்ததியை அழைத்து    வந்து  காண்பிக்க  அந்த  பசுமை   இருக்குமா...? காலிமுகத்திடலில்    நடைப்பயிற்சிகூட  இன்றைய  அரசியல் தலைவர்களுக்கு    மெய்ப்பாதுகாவலர்கள்   இல்லாமல் சாத்தியமில்லை. எல்லாம்    மாறிவிட்டது.   ஆனால் -  அந்தக்கடல்  மாத்திரம் என்றும்போல்   அலையடித்து  கரைவந்து  எமது  கால்களை நனைத்துச்செல்கிறது.

(தொடரும்)


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R