பனியும் பனையும்எஸ்.பொ.[ஈழத்து எழுத்தாளர்களில் தனக்கென்றொரு பாணியை உருவாக்கி, தனக்கென்றொரு முகாமை உருவாக்கி வெற்றி நடை போடுபவர் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை அவர்கள். இவருக்கு அண்மையில் அவரது வாழ்நாள் இலக்கிய சேவையினைக் கெளரவிக்கும் முகமாக கனடாவிலிருந்து இயங்கும் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' என்னும் அமைப்பு 2010ற்கான இயல் விருதினை வழங்கிக் கெளரவித்தது. எஸ்.பொ. அவர்கள் தனது மித்ர பதிப்பகம் மூலம் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நூல்களைப் பதிப்பித்து வருகின்றார். இவரது பதிப்பகத்தின் மூலம் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்று 'பனியும் பனையும்' என்னும் தலைப்பில் வெளியாகிப் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றதைத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் அறிவர். மேற்படி நூலினை 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்க முடியும்.  மேற்படி நூலின் நுழைவாயிலில் எஸ்.பொ. எழுதிய குறிப்புகளையும், நூலிற்கான 'நூலக' இணையத் தொடர்பினையும் 'பதிவுகளி'ன் வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம். மேற்படி நூலில் எஸ்.பொ. அவர்கள் சிறுகதைகளை புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் வாழும் நாடுகளுக்கேற்ப வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்விதமே அணுக வேண்டுமென்பதே எமது கருத்தும். - பதிவுகள் ]

நான் நிர்ப்பந்த வசத்தால் பரதேசியானவன். இதனால் நேர்ந்த இழப்புகள் அனைத்தையும் தமிழ் ஊழியத்தினால் ஈடு செய்யலாம் என்ற ஞானம் பெற்ற பரதேசி. இந்த ஞானம் போதிமர நீழலின் சகாயமல்ல. படைப்பு சரஸ். இறக்கும் வரை நான் வசப்படுத்திய சரஸ் ஊறிக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதும் என் தவம். இதனாலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் தமிழ் ஊழியம் தொடர்ந்தது. புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவரும் சிறுசஞ்சிகைளின் பரமார்த்த வாசகனும் நான். பல நாடுகளிலே வாழும் படைப்பாளிகளுடனும் ஞானப் பகிர்வினை யாசிப்பவனும், சிறு சிறு குழுக்களாய் நமது ரஸனையை எல்லைப்படுத்திக் கொள்ளுதல், நமது படைப்பு வீரியத்தினை சிதறச் செய்கின்றதோ என்கிற அச்சம் என்னுள் எழுந்தது. 'மறைவாகப் புதுக்கதைகள் பேசி' மகிழும் ஒரு போக்கு. தமிழின் ஆதாயமாகக் கனியாது என்கிற உண்மையும் உறைக்கலாயிற்று. நமது படைப்பு முயற்சிகள் ஒரு முகப்படுத்தப்படும் பொழுது புதியன சாதித்தல் சாத்தியம் என்ற ஞானம் விடிந்தது. இந்த ஞானத்தைச் செயற்படுத்தும் தலைமை ஊழியக்காரனாய் என்னை நானேநியமித்துக் கொண்டேன். இந்த ஊழியத்தின் நம்பிக்கைப் பேழையாய் இந்த நூல் அமைகின்றது.

'இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் சர்வதேச மயப்படும். அதற்குப் புலம் பெயர்ந்த நாடுகளிலே வாழும் ஈழத்தமிழரின் புதிய படைப்பாற்றல் தலைமை தாங்கும்' என்கிற சுவிசேஷத்தை என் இந்த யாத்ராவில் முன்வைத்தேன். பல வட்டங்களையும் சேர்ந்த இலக்கிய நேசர்களுடன் இது குறித்தும் பேசினேன்; விவாதித்தேன். என் கூற்றினை எண்பிக்க, புதிய படைப்பாற்றல்களின் கோலங்களின் வகையையும் வண்ணத்தையும் முன்வைக்கும் தொகுதிகளை வெளியிடுதல் அவசியம் என்பதையும் உணர்ந்தேன். இத்தொகுதிகளை வெளியிடும் முயற்சியின் முன்னோட்டமாகவும் பனியும் பனையும் அமைகிறது.

'பனியும் பனையும்' என்கிற தலைப்பே ஒரு குறியீடுதான். பனைமர மண்ணின் மணத்தையும், பண்பையும், உறவையும், தியானத்தை மறக்காத பரதேசிகள் நாங்கள். பனி பெய்யும் அந்நியச் சூழ்நிலைகளிலே, வாழ ஏர்வைப் பட்டுள்ளோம். புதிய நாடுகளிலே நமக்கு ஒரு தனித்துவ கலாசார Identity ஐத் தக்க வைக்கும் வேள்வியாகவும் நமது வாழ்க்கை அமைந்துள்ளது. எனவே, நமது படைப்புகளிலே பனையின் கலாசார வேர்களும், பனிக்குளிரின் புதிய நிர்ப்பந்தங்களும் சங்கமிக்கின்றன. புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களுடைய, சர்வதேசியப் பாங்கான இந்த முதலாவது தொகுதிக்கு இப்பெயர் நியாயமாகப் பொருந்தும். இத்தொகுதியைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் நாம் பூண்டுள்ள படைப்பு நேர்த்திகளைப் புலப்படுத்தும் தொகுதிகள் வெளிவருதல், அடுத்த நூற்றாண்டின் வாசகர்களைப் பதப்படுத்தவும் வசப்படுத்தவும் உதவும்.

இத்தொகுப்பு வேலைகள் என் படைப்பிலக்கியப் படைப்பு நேரத்தினை விழுங்கும் என்பது உண்மை. என் சொந்த இழப்புகள், என் இனத்தின் பெருமையையும் மகிமையையும் உயர்த்துமானால், அஃது இனிதே, ஓர் இனத்தினது கௌரவம் என் பிரபலத்திலும் பார்க்க மகத்தானது. அந்த இனத்தின் வீறார்ந்த பணியிலே நான் செயலூக்கமுள்ள ஊழியனாய்ப் பிணைவதினால், இழப்பு என்று சொல்லவும் ஏலாது. இதனாலும் இனிமை என்றேன்.

என் புகழையும் வித்துவத்தையும் பிரசித்தப்படுத்தும் ஓர் உபாயமாக, என் இலக்கிய ஊழியத்தை நான் என்றும் தரிசித்ததேயில்லை. என் அனுபவங்களை இளைய படைப்பாளிகளுடன் பகி‘ந்து கொள்வதை இலக்கிய சகாயத்திற்கு உதவும் ஒரு சல்லாபமாகவும் மதிக்கின்றேன். இதனை ஒரு போஷகமாகவும் நான் நினைக்கவில்லை. என்னைச் சதா இளமைப்படுத்துவதற்கு இந்தச் சல்லாபம் ஓர் ஊக்கியும். இதனைப் புதியவர்கள் விளங்கிக் கொள்ளுதல் என் பேறு.

இத்தொகுதிகள் தனிமனித முயற்சிகளாக அல்லாமல், கூட்டு முயற்சியாகக் கனிதல் வேண்டும். இதற்குத் தற்பற்றைத் துறக்கும் மனசுந் தேவை. குழு விசுவாசங்களை நெகிழ்த்தும் இலக்கியப் பக்தி வேணும். ஞானத்தைப் படைப்பதிலும் பகிர்வதிலும் ஆத்மார்த்த ஈடுபாடு அவசியம். தமிழ் இனத்தின் தனித்துவ முகத்தையும் அடையாளங்களையும் பேணும் உயர்வேள்வியின் ஆகுதியாக நம் எழுத்து ஏற்றம் பெறல் வேண்டும் என்கிற பக்குவம் தேவை.

அத்தகைய மனசர்கள், பக்தர்கள், பக்குவர்களுடைய சகல ஒத்துழைப்பையும் யாசிக்கின்றேன். நமது படைப்பின் வீறையும் விருந்தையும் ஒவ்வொரு தமிழ்க்குடும்பத்திற்கும் எடுத்துச் செல்வோம்.

'பனியும் பனையும்' நூலினை வாசிக்க...

நூலகம்: 'பனியும் பனையும்' .... http://noolaham.net/project/01/65/65.pdf


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R