தமிழில்  சிறுகதை   இலக்கியம்: அவுஸ்திரேலியாவில்  நடந்த  அனுபவப்பகிர்வு; படைப்பிலக்கியத்தில் செம்மைப்படுத்தலுக்கு அவசியமான  தேர்ந்த  வாசிப்பு  அனுபவம்!எழுத்தாளர் முருகபூபதிஅவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர்  விழாவையும் கலை -இலக்கிய சந்திப்புகளையும் நடத்திவரும்  அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் மெல்பனில் தமிழில் சிறுகதை இலக்கியம் தொடர்பாக அனுபவப்பகிர்வு     நிகழ்ச்சியை வேர்மண்ட் சவுத் சமூக நிலைய மண்டபத்தில் நடத்தியது. இதுதொடர்பாக    இந்த   ஆக்கத்தை   எழுதுவதற்கு  விரும்பினேன். ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள் - மொழிபெயர்ப்பு முயற்சிகள் -     இலக்கிய இயக்கம் - கலை, இலக்கியத்துறை  சார்ந்த  நம்மவர்கள் தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். உயிர்ப்பு- Being Alive (ஆங்கில மொழிபெயர்ப்பு)    முதலான   சிறுகதைத்தொகுப்புகளையும்     பதிப்பித்திருக்கின்றேன். அந்த  வரிசையில் அவுஸ்திரேலியாவில்      தமிழ்ச்சிறுகதை இலக்கியம்  பற்றிய இந்த ஆக்கத்தை  எழுதுவதற்கு முனைந்தேன்.  சிறுகதை  இலக்கிய வடிவம் எமக்கு மேனாட்டினரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக விமர்சகர்கள் இன்றுவரையில் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் எமது முன்னோர்கள் சிறந்த கதைசொல்லிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை     ஏனோ மறந்துவிடுகின்றோம். தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர்  கதைகேட்கும் ஆர்வம் குழந்தைகளுக்கும் இல்லை. கதைசொல்ல  பாட்டா, பாட்டிமாருக்கும்  அக்கறை  இல்லை. இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவர்கள் அனைவருமே தற்பொழுது தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  அவுஸ்திரேலியா தமிழ்ச்சூழலும்  அதற்கு விதிவிலக்கல்ல.       பகல்பொழுதில்  வேலைக்குச் செல்வதனால்  தொலைக்காட்சித்தொடர்களை  பிரத்தியேகமாக பதிவுசெய்ய  வழிசெய்துவிட்டு    -   மாலை வீடு திரும்பியதும்    அவற்றைப்பார்த்து  திருப்தியடையும் நடைமுறை வந்துவிட்டது பல வீடுகளில். இந்த      இலட்சணத்தில் எத்தனைபேர் சிறுகதைகளைப்படிக்கிறார்கள்?  அல்லது படிப்பதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள்.?  சிறுகதை எழுத்தாளர்கள்  தமது படைப்பு தொடர்பாக  எவரேனும், வாசகர்    கடிதமாவது   -   கருத்தாவது      எழுதமாட்டார்களா      என்று காத்துக்கிடக்கின்றனர். சிறுகதைத்தொகுதியை  வெளியிட்டால்  அதனைப்பற்றி      குறைந்தபட்சம் இதழ்களில்  சிறிய அறிமுகக்குறிப்பாவது   பதிவாகுமா?  என்ற  எதிர்பார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தைச்சேர்ந்த       பல    படைப்பாளிகள்     வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தபின்னர்      அவர்களின்       படைப்புகள்      ஈழத்து வாசகர்களுக்கு புதிய களங்களை        அறிமுகப்படுத்துகின்றன. இலங்கையில்       நீடித்த       போர்       எவ்வாறு       போர்க்கால     இலக்கியங்களை     தமிழுக்கு      வரவாக்கியதோ    அதேபோன்று   புலம்பெயர்ந்தவர்களின்      படைப்புகள்      புகலிட  இலக்கியமாக  அறிமுகமாகிவிட்டன. சிறந்த     சிறுகதை     எது?     என்பது     வாசகரின்     ருசிபேதத்தில் தங்கியிருக்கிறது.     ஒருவருக்கு      பிடித்தமானது      மற்றுமொருவருக்கு பிடித்தமில்லாமல்       அல்லது     எழுதப்பட்ட     முறையினை     புரிந்துகொள்ள  முடியாமல்     போகலாம்.

களத்திலறங்கி      யதார்த்தமான      சிறுகதைகளை     படைப்பவர்களும் குறிப்பிட்ட     களம்   பற்றிய     கேள்விஞானத்தில்    சிறுகதைகளை தயாரிப்பவர்களும்     ஈழத்து     தமிழ்ச்சிறுகதைத்    துறையில்     மட்டுமல்ல  புகலிடத்திலும்      இருக்கிறார்கள். கரு,    பாத்திர வார்ப்பு,     படைப்புமொழி நடை,      வாசகரின்    சிந்தனையில் ஊடுருவும்     ஆற்றல்     என்பவற்றால்     ஒரு சிறுகதை     தரமாக அமையலாம்.       இலங்கையில்     வருடாந்தம்    சுமார்     ஐநூறு    தமிழ்ச்சிறுகதைகள்     வெளியாகின்றன.   தேசிய     இதழ்களின்    ஞாயிறு பதிப்புகள்    மற்றும்      இலக்கியச்சிற்றிதழ்களில்    பிரசுரமாகும் சிறுகதைகள்    இந்த    எண்ணிக்கையில்   உள்ளடக்கம்.    அவை அனைத்தையும்     வாசிக்கும்     சந்தர்ப்பம்     வெளிநாட்டில்  வாழும் என்போன்ற       வாசகருக்கு      இல்லை.     இணையத்தில்     ஓரளவு    வாசிக்க முடிந்தாலும்     அனைத்தையும்     இணையத்தில்   பதிவிறக்கம்   செய்ய முடியாது.     இந்நிலையில்      நீண்ட நாட்களுக்கு     மனதில்    பதிந்திருக்கும்   சிறுகதைளை     வாசிக்கும்      அபூர்வமான தருணங்கள் மனநிறைவைத்தந்துள்ளன.

தமிழில்  சிறுகதை   இலக்கியம்: அவுஸ்திரேலியாவில்  நடந்த  அனுபவப்பகிர்வு; படைப்பிலக்கியத்தில் செம்மைப்படுத்தலுக்கு அவசியமான  தேர்ந்த  வாசிப்பு  அனுபவம்!

இந்தப்பின்னணிகளுடன்      அவுஸ்திரேலியாவில்      சிறுகதை    இலக்கியம்       படைத்தவர்களையும்      தொடர்ந்து  இந்தத்துறையில்     தமது     உழைப்பை      செலவிட்டுக்கொண்டிருப்பவர்களையும்      ஏதேனும்  தனிப்பட்ட      காரணங்களின் நிமித்தம்      சிறுகதைகளை     எழுதாமல்  ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவர்களையும்        அவதானிக்கமுடிகிறது. இலங்கை,      தமிழ்நாடு,      சிங்கப்பூர்       மலேசியா    அவுஸ்திரேலியா,       கனடா     மற்றும்      ஐரோப்பிய     நாடுகளிலும்       ஏற்கனவே  எழுதிக்கொண்டிருந்த       பலர்      சிறுகதை     எழுதுவதை   நிறுத்திக்கொண்டிருப்பதையும்      சுட்டிக்காட்டலாம்.

மெல்பனிலிருந்து சுதாகரன், முருகபூபதி, ஆவூரான் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, நடேசன், பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா,     அருண். விஜயராணி,       உஷா சிவநாதன்(ரதி)ரேணுகா தனஸ்கந்தா,     மாவை  நித்தியானந்தன், புவனா  இராஜரட்ணம்,     சாந்தா ஜெயராஜ், நல்லைக்குமரன்     குமாரசாமி,  நிவேதனா அச்சுதன், யாழ். பாஸ்கர், சிசு.நாகேந்திரன், ரவி, கல்லோடைக்கரன்,  ஜெயகுமாரன், மெல்பன் மணி  - நித்தியகீர்த்தி (மறைந்துவிட்டார்)   சாந்தினி புவனேந்திரராஜா, மனோ ஜெகேந்திரன், ஜெகேஎன்ற ஜெயகுமாரன், ராணி தங்கராஜா ஆகியோரும் சிட்னியிலிருந்து எஸ்.பொ,  காவலூர்  இராஜதுரை,  மாத்தளை சோமு, ஆசி. கந்தராசா, ரஞ்சகுமார், கோகிலா மகேந்திரன்,  சந்திரகாசன்,  களுவாஞ்சிக்குடி   யோகன், தேவகி கருணாகரன்,  சாயி சஸி,     உஷா ஜவஹார்,    நவீனன் இராஜதுரை , காணா. பிரபா    ஆகியோரும்   சிறுகதை  இலக்கியத்தில்  ஈடுபாடுள்ளவர்கள்.  கன்பராவிலிருந்து யோகன்,   மதுபாஷினி.

இவர்களில்  எத்தனைபேர் தொடர்ந்தும் எழுதுகிறார்கள்  எத்தனைபேர் மற்றவர்களின்   தொடர்பயணத்தில் இணையாமல்  தங்கிவிட்டார்கள் என்ற பட்டியலை இங்கு தரவில்லை. சிலவேளை  தற்பொழுது   எழுதாமலிருப்பவர்கள் மீண்டும் உயிர்ப்புற்று     சிறுகதை இலக்கியத்திற்கு புத்துயிர்ப்பு வழங்கி  தாமும் புத்துயிர்ப்பு பெறலாம்.

சிறுகதை      இலக்கியப்போட்டிகள்      இலங்கை     மற்றும்      தமிழகத்திலும் ஏனைய     நாடுகளிலும்      நடப்பதனால்      குறித்த      போட்டிகளுக்கு    எழுதி     பரிசுபெற்றவர்களும்      இவர்களிடையே எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவுஸ்திரேலியா தமிழ்       இலக்கிய    கலைச்சங்கமும்     கடந்த    2010    ஆம்   ஆண்டு  பத்தாவது      எழுத்தாளர்      விழாவை     முன்னிட்டு      சர்வதேச     சிறுகதை     (கவிதை)     போட்டிகளை       நடத்தியிருக்கிறது. போட்டிகளில்      பரிசுபெற்ற     தகுதியை      மாத்திரம்      வைத்துக்கொண்டு      கதைகளின்     தரத்தை      தீர்மானித்துவிடமுடியாது.   ஏற்கனவே      இந்தப்பத்தியில்       குறிப்பிட்டவாறு       ரஸனையில் ருசிபேதமிருக்கிறது. தரநிர்ணயத்தை      வரிசைப்படுத்தும்பொழுது      ஆளுக்காள்   மறுபட்ட நிலைப்பாட்டை     எடுத்துவிடுவார்கள்.      அதனால்     போட்டிகளை - இலக்கியத்துறையின்      வளர்ச்சிக்கும்      -    எழுத    முன்வருபவர்களை  ஊக்கப்படுத்துவதற்கும்       மாத்திரமே       கவனத்தில்      கொள்ளலாம்.

ஏனென்றால்      எந்தவொரு      போட்டிகளுக்கும்      தமது       படைப்புகளை அனுப்பாமலேயே        தொடர்ச்சியாக      உழைத்து       உன்னதமான  படைப்பிலக்கியவாதிகளாக        வளர்ந்தவர்களையும்       நன்கறிந்திருக்கும்  அதேவேளையில்     -     போட்டிகளுக்கு      அனுப்பி     பரிசுகள்      பெற்று    அதன் ஊடாக       நல்லதொரு     அங்கீகாரத்தையும்     பெற்றுக்கொண்டு     தங்களை       வளர்த்துக் கொண்டவர்களையும்      போட்டிகளில்     மாத்திரம்  கலந்துகொண்டு       காலப்போக்கில்      சோர்ந்து       போனவர்களையும்  இலக்கிய      உலகில்      பார்த்திருக்கின்றோம். சிறுகதை      இலக்கியம்      தொடர்பான       அனுபவப்பகிர்வை      எவ்வாறு வடிவமைப்பது? எழுதுவதற்கு      பயிற்சியின்    அவசியம்       இருப்பதுபோன்று  வாசிப்பதற்கும்      அனுபவப்பயிற்சி    இன்றியமையாதது.     அதனை வாசிப்பு அனுபவம்      எனவும்      கொள்ளலாம்.

ஒரு     காலத்தில்     மு. வரதராசனின்      எழுத்துக்களை  விரும்பிப்படித்தவர்களுக்கு     பிறிதொரு      காலத்தில்        புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன்,       ஜெயகாந்தன்          விருப்பத்துக்குரியவர்களாகலாம்.  அதன்பின்னர்        சுந்தரராமசாமி,    ஜெயமோகன்,     பிரபஞ்சன், ராமகிருஷ்ணன்...      .என்று     சிலரது     வாசிப்புத்தேர்வு      மாற்றம் பெறலாம். இதே     நிலைமைதான்     இலங்கையிலும்.

தற்காலத்தில்     வெளிநாடுகளில்      ஷோபா சக்தி,      கருணாகர மூர்த்தி, நடேசன்,     முத்துலிங்கம்,      ஆசி. கந்தராஜா,      சுதாகரன்,     ஸ்ரீரஞ்சனி  முதலான     குறிப்பிட்ட      சிலரின்      கதைகளின்     களம்      கதைசொல்லும்  முறைகள்     வாசகரின்     கவனத்தை      ஈர்த்துள்ளதை     அறிய முடிகிறது. அவுஸ்திரேலியாவில்     சிறுகதைத்துறையில்      ஈடுபடும்    அல்லது  முன்னர்      ஈடுபட்டவர்கள்      குறிப்பிட்ட      இச்சிறுகதையாசிரியர்களின்  சிறுகதைகளை       சந்தர்ப்பம்    கிடைக்கும்பொழுது      படிப்பதன்     மூலம்  தம்மையும்      வளர்த்துக்கொள்ளமுடியும். சிட்னியிலிருந்து      எழுதிக்கொண்டிருக்கும்      மாத்தளைசோமு இலங்கையிலும்      தமிழ்நாட்டிலும்      வாழ்ந்த      காலப்பகுதிகளிலும்  சிறுகதைகள்      எழுதிய      மூத்த      எழுத்தாளர்.     அவரது      சில     கதைகளில் செம்மொழி     இலக்கிய    மரபின்     தாக்கம்     இருப்பதாக     முனைவர் மு. பழனியப்பன்       எழுதியிருந்த     பதிவொன்றை     அண்மையில்    திண்ணை   இணையத்தளத்தில்    படித்தேன். மாத்தளைசோமு     தமிழின    அடையாளம்      குறித்து     தமது சிறுகதைகளின்     ஊடாக    செய்திகளை     சொல்லிவருபவர்.

நடேசன்,    சுதாகரன்,     ஆசி. கந்தராஜாவின்     கதைகளில்  சர்வதேசப்பார்வையிருப்பதை      அவதானிக்கலாம். கோகிலா மகேந்திரன்,      ஆவூரான் சந்திரன்,     பாடும்மீன்    ஸ்ரீகந்தராசா, முதலானோரின்      கதைகள்    தாயகத்திற்கும்     புகலிடத்திற்கும் இடையேயான     வாழ்வனுபவங்களை      சித்திரிப்பனவாக  இருப்பதைக்காணலாம்.      எழுதப்பட்ட     சிறுகதைகளை     அனுபவம்    மிக்க ஒருவரினால்      உயிர்      சிதையாமல்      செம்மைப்படுத்துவதன்     மூலமும் படைப்பின்      தரத்தை      உயர்த்த     முடியும்.      அந்தவகையில்    படைப்புகளை  செம்மைப்படுத்துவதில்      எஸ்.பொ.    சிறந்த    முன்னோடி.

அனுபவப்பகிர்வின்      ஊடாக      ஒவ்வொருவரது     படைப்புலகம்     பற்றியும்  தனித்தனியாக     ஆய்வுசெய்யமுடியும். அவுஸ்திரேலியாவில்      பல்கலைக்கழக     பிரவேசப்பரீட்சையில்     தமிழையும்      ஒரு    பாடமாக     தோற்றக்கூடிய      வாய்ப்பிருக்கிறது.   அதனால்      தமிழையும்     உயர்கல்வியில்      ஒரு     பாடமாக தெரிவுசெய்துள்ள       மாணவர்களும்    -    அவர்களுக்கு     பயிற்சியளிக்கும்  ஆசிரியர்களும்     தமிழ்ச்சிறுகதை     இலக்கியம்      தொடர்பாகவும்     விசேட கவனம்     செலுத்தும்      காலத்தில்     இங்குள்ள     படைப்பாளிகளின்  சிறுகதைத்தேர்வு      முக்கியமானது. சிட்னியில்    வதியும்     திரு.  திருநந்தகுமார்    -  தம்மிடம்     தமிழ்     கற்கும்  மாணவர்களுக்கு    இதுவிடயத்தில்      நல்ல    சிறுகதைகளை அறிமுகப்படுத்தி     அவர்களின்     கருத்துக்களை     ஒப்படைகளாக  மாற்றுவதற்கு      ஊக்கப்படுத்திவருவதாகவும்      அறியமுடிகிறது.

புகலிடத்தில்     வாழ்ந்தால்     புகலிடத்தை     உள்வாங்கி     புதிய     களத்தை தமது     படைப்புகளில்     சித்திரிப்பதற்கு    முயற்சி செய்யவேண்டும்     என்று     ஒரு     சந்தர்ப்பத்தில்     பேராசிரியர் கா. சிவத்தம்பி      குறிப்பிட்டார். ஒரு     படைப்பாளியிடம்      இதனைத்தான்      எழுதவேண்டும்     என்று எவரும்     வலியுறுத்த     முடியாது     என்ற     விமர்சனமும்    இருக்கிறது.

அவுஸ்திரேலியா     SBS    தமிழ்    வானொலி     நிகழ்ச்சியில்     அதன் ஊடகவியலாளர்     திரு. ரெய்செல்      அவ்வப்பொழுது      ஒலிபரப்புச்செய்யும் கதையும்     கதையாளரும்     என்ற     நிகழ்ச்சி பற்றியும்      இந்தப்பத்தியில்  குறிப்பிடலாம்.        அவுஸ்திரேலியாவை       களமாகவைத்து       எழுதப்பட்ட சிறுகதையை     ஒலிபரப்பும்    அதேவேளையில்     குறிப்பிட்ட     சிறுதையை     எழுதியதன்       நோக்கம்      பற்றிய    படைப்பாளியின்  கருத்தையும்     ஒலிபரப்பும்     வித்தியாசமான      பயனுள்ள     நிகழ்ச்சி. அதனால்     படைப்பாளியும்     கதையைகேட்கும்     நேயரும்    (வாசகரும்)     பயனடைவதுடன்   தம்மை    வளர்த்துக்கொள்ளவும் முடிகிறது.

ஆங்கில     இலக்கியச்சூழலில்     சிறுகதைகளை     பலரது      முன்னிலையில் வாசித்துவிட்டு     அதன் பின்னர்       விமர்சிக்கும்      நடைமுறை இருந்துவருகிறது.       அதனைப்பின்பற்றி      தமிழ்     இலக்கியத்துறை  சார்ந்தவர்களும்      சிறுகதை,     நாவல்,    கவிதை,     பத்தி எழுத்துக்கள், வானொலி       தொலைக்காட்சி     ஊடகம்,      இணையத்தளங்கள்  தொடர்பாகவும்     அவ்வப்போது       அனுபவப்பகிர்வுகளை      நடத்தலாம்.

மெல்பன் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் எனது தொடக்கவுரை:- இந்த நாட்டில் புகலிடம் பெற்ற எழுத்தாளர்கள், இங்கு    வந்தபின்னர்  படைபிலக்கியத்துறைகளில்    ஈடுபடுபவர்கள் எம்மத்தியிலிருக்கிறார்கள்.சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம்,  நாடகம், பத்தி எழுத்துக்கள்  எழுதுபவர்கள் இந்தக்கண்டத்தில் சில மாநிலங்களில் வசித்துவருகிறார்கள். நாம் இன்று சிறுகதை இலக்கியம்  தொடர்பாகவே அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளோம். எதிர்காலத்தில் இலக்கியத்தின் இதர துறைகள் தொடர்பான அனுபவப்பகிர்வுகளையும் நடத்தவுள்ளோம். ஆங்கில இலக்கியத்துறையில் இந்த நடைமுறை நீண்டகாலமாக இருந்துவருகிறது.   ஆனால் எமது தமிழ்ச்சூழலில் ஒரு படைப்பிலக்கிய நூலின் வெளியீட்டு விழாவில் நூலாசிரியரை போற்றிப்புகழ்ந்துவிட்டு,    அவரது நூலைப்பற்றி மேலெழுந்தவாரியான  கருத்துக்களை  மாத்திரம்  சொல்லிவிட்டு சிறப்புப்பிரதி  வழங்கும்  சடங்குகளுடன் ரசனையை மட்டுப்படுத்திக்கொண்டு  அகன்றுவிடுகிறோம். இணைய இதழ்கள் பத்திரிகைகளில்  படங்களுடன் செய்தி வெளியானதும்    அதனைப்பார்த்து திருப்தியடைவதுடன் காரியம் முடிந்துவிடும்.

சிறப்பு பிரதி பெற்றவர் அதனைப்படித்தாரா? என்ன கருத்துடன் அவரது வாசிப்பு அனுபவம் இருக்கிறது?     என்ற    கவலையெதுவும் இல்லாமல் அடுத்த நூலை எழுதவும் வெளியிடவும்  தயாராகிவிடுகின்றோம். புகலிடத்தில் நாம் கற்றதும் பெற்றதும் அநேகம்.    அவற்றை பகிர்ந்துகொள்வது போன்றதே வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்வதும். இதுபோன்ற  நிகழ்ச்சிகள் பிறந்த நாள் -  சாமத்தியச்சடங்கு - கலியாணவீடு போன்ற வைபவங்கள் அல்ல. கல்வி, மருத்துவம், சட்டம், கணக்கியல், பொறியியல், கட்டிடக்கலை, முதலான துறைகளில் பணியாற்றுபவர்களுக்காக காலத்துக்காலம்  கருத்தரங்குகள் பயிலரங்குகள் நடப்பதை அறிவோம். குறிப்பிட்ட துறைகளில்  நாளுக்கு நாள் ஏற்படும்  மாற்றங்கள் முன்னேற்றங்கள் தொழில் நுட்ப வளர்ச்சிகள்  என்பன குறித்த அரங்குகளில் ஆராயப்படும். அதாவது Updating இடம்பெறும். படைப்பிலக்கியவாதிகளிடம் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்ள முயற்சிக்கும் தேடலிருந்தால்தான் ஆரோக்கியமான  வளர்ச்சி உருவாகும். அதற்காகவே இந்த அனுபவப்பகிர்வு.

பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் முன்னோடி  இலக்கிய விமர்சகர்  க.நா. சுப்பிரமணியம்  (க.நா.சு)  எழுதிய      படித்திருக்கிறீர்களா? என்ற நூலின் முன்னுரையில் அவர் சொல்கிறார்:- இலக்கியத்தில் தேர்ச்சியுள்ளவர்கள் பழசைத்தாண்டி     புதுசு பக்கம் வர மறுத்தார்கள். புதுசை மட்டும் அறிந்தவர்கள்  பழசின் பக்கமே போக மறுத்தார்கள்.   

இவ்வாறு 1957 ஆம் ஆண்டு எழுதியிருக்கிறார். ஐம்பத்தியாறு ஆண்டுகளின்     பின்னரும்    இதுதான்     நிலைமை. சங்கத்தின்    நடப்பாண்டு     தலைவர்    டொக்டர் நடேசன் தலைமையில்    நடந்த    இந்நிகழ்ச்சியில்    இலங்கையின்    மலையக    இலக்கிய  முன்னோடி - படைப்பாளி   தெளிவத்தை ஜோசப்பின்  மனிதர்கள் நல்லவர்கள்  ஆவூரான் சந்திரனின்   நான் இப்படி அழுததில்லை   பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசாவின் வழக்குத்தவணைக்கு   வரமாட்டேன் கே.எஸ்.சுதாகரனின்   காட்சிப்பிழை    நடேசன்    எழுதிய    பிரேதத்தை அலங்கரிப்பவள் என்ற சிறுகதை ஆகியன வாசிக்கப்பட்டு அவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. தலைமையேற்ற     நடேசன் சமீபத்தில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றுள்ள அலிஸ் மன்றோவைப்பற்றிய   சிறு அறிமுகத்தை வழங்கியதுடன்  அலிஸ்மன்றோ சிறுகதைகள்   மாத்திரமே படைத்து அந்தத்துறையில் சாதனைகள் படைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

முருகபூபதி தெளிவத்தை ஜோசப்பின் மனிதர்கள் நல்லவர்கள்  என்ற பலவருடங்களுக்கு முன்னர்  மல்லிகையில்   வெளியான சிறுகதையை  வாசித்து தனது வாசிப்பு அனுபவங்களை சொன்னார். அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட சிறுகதை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஆவூரன்   சந்திரனின்   நான் இப்படி அழுததில்லை என்ற   சிறுகதையை    அபர்ணா சுதன்    வாசித்தார்.   இச்சிறுகதை தொடர்பாகவும்    கலந்துகொண்டவர்கள்    தமது   கருத்துக்களை தெரிவித்தனர்.பாடும் மீன் சு.ஸ்ரீகந்தராசாவின்  வழக்குத்தவணைக்கு வரமாட்டேன் என்ற சிறுகதையை அவரே வாசித்தார். கே. எஸ். சுதாகரன் காட்சிப்பிழை என்ற தமது சிறுகதையை அவரே வாசித்தார். நடேசன் எழுதிய பிரேதத்தை அலங்கரிப்பவள் சிறுகதையை பேராசிரியர் ஆசி. கந்தராஜா வாசித்தார்.

ஒவ்வொரு  கதையும் வாசிக்கப்பட்டதும் நீண்ட நேரம் கதைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு  விவாதிக்கப்பட்டது.  உரையாடல்கள் மிகவும் புரிந்துணர்வுடன் நிகழ்த்தப்பெற்றமை இச்சந்திப்பில் ஆரோக்கியமானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தேர்ந்த ரஸனையை வளர்க்கும் நோக்கத்துடன் நடைபெற்ற அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில்  மருத்துவம்  கல்வி  படைப்பிலக்கியம்  வானொலி ஊடகம்  இதழியல் இணையம் வலைப்பூக்கள் முதலானவற்றில் தொடர்புடைய பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தகுந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R