ஆகஸ்ட் 2013 கவிதைகள்!

இர.மணிமேகலை ( பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி.,கோயம்புத்தூர்). கவிதைகள்!

1. அமர்

சாத்திய கதவுச் சந்தின் வழியாக
மெல்லென பரவும் ஒளிக்கற்றையென
கசியும் அந்தக்குரலில்
தொலைவுகளைக் கடந்த தனிமை படர்ந்திருந்தது
மழலைக்குத் துடிக்கும் மனத்தில்
நிகழ் காலத்தின் வண்ணங்கள் ஒளியிழந்திருந்தன
தன்னவளின் பொய்க்கோபத்திற்கு ஏங்கும்
அவனது களத்தில் கூர்தீட்டப்பட்ட எழுதுகோல்கள்
நிறைந்திருக்கின்றன
படபடக்கும் தாள்கள் தம்முள் போருக்கான ஒத்திகையை
நிகழ்த்திய வண்ணமேயிருக்கின்றன
பேருருக்கொள்ளும் அணு உலையில்
பூமியின் காலங்கள் இடம் மாறிப்போயின
சிவபீடங்களின் அதிர்வலைகளை
நுகராத நந்தர்கள் வலம் வந்த வண்ணமேயிருக்கிறார்கள்
அவர்களதுகொந்தளத்தில் வெண்மை கூடியிருக்கிறது
பெதும்பைப்பருவத்துப் பெண்ணுடல் வெளி
தன்னை இழந்துகொண்டிருந்தது மெதுவாக
சமூக வலைப்பின்னலை ஊடறுக்கும்
புத்தகங்களின் மனிதனவன்
அவன் களமெங்கும் ஆயுதங்கள்.

2. அபகரிப்பு

வெயிலற்ற மழைக்காலப் பொழுதுகளில்
தனித்துத் திரிகிறேன்
வாயு வெளிகளினூடாகப் பறக்கும் பறவையொன்று
உணவின் திரளைப் பறித்துக்கொண்டது
அதன் சகாக்களுடன் விருந்து
தலை சாய்ந்து இறுமாந்து நோக்கிய அதன் ஆணவம்
அறிவு ஜீவிகளின் அவையில்
அலைகளின் நுரையெனக் கரைந்தது
கருந்திராட்சைக் கூந்தலில்
சூடிவிட்டார்கள் சொற்களின் மகுடத்தை
தாழம்பூ மணந்துகிடக்கிறது வீடுவரை.


3. பருத்திக்காட்டுப் பாடகி

படர்ந்திருக்கும் அந்த மரம்
கால நீட்சியின் கோடுகளை உள்ளடக்கியிருக்கிறது
மொழியின் வடிவுகுறித்தான அதன் சலசலப்பில்
இளங்குறுத்தின் மையம் காயங்கொள்கிறது
பருத்திக்காட்டில் நூல்நூற்றவளின்
பழம்பாடலொன்று கசிகிறது
அவள் வெளியிலிருந்து லயம் மாறாமல்
முகம் வாடிநிற்கும் வயோதிகக் குழவியின்
விசும்பல் ஒலியில்
இரவு நீள்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


நீண்ட வீதியது

முனைவென்றி நா. சுரேஷ்குமார் (பரமக்குடி, தமிழ்நாடு)

ஆகஸ்ட் 2013 கவிதைகள்!

பார்வையின் எல்லை
முடியும் தூரத்தில்
மங்கலாய்த் தெரிகிறது
ஒரு உருவம்

இருபுறமும் வானுயர்ந்த
கட்டடங்கள்

காற்றில் அசைந்தாடும்
விளம்பரப் பதாகைகள்
ஒய்யாரமாய்ப் புன்னகைக்கும்
விளம்பர நடிகர் நடிகைகள்

மெல்ல நெருங்குகிறது
அந்த உருவம்

சாமி சிலையை
தலையில் சுமந்தபடி...

எதிர்த் திசையில்
மெல்ல நெருங்குகிறது
அந்த உருவம்

மேல்சட்டை அணியவில்லை
இடுப்புக்குக் கீழே
தொடைவரை கட்டிய வேட்டி
நல்ல பூ வேலைப்பாடுகள்
அமைந்த ஜரிகை

மெல்ல சத்தமின்றி
கைநீட்டி யாசிக்கின்றான்

களைப்படையவே இல்லை
அவன்

அமைதி தழுவ
நடக்கின்றான்

வியந்து பார்க்கின்றேன்
திரும்பி நின்று...

அவனையறியாமலேயே நானும்
என்னையறியாமலேயே அவனும்
எதிரெதிர் நடைபாதையில்
மெல்லக் கடக்கின்றோம்
அந்த வீதியை...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (இலங்கை) கவிதைகள்.

ஆகஸ்ட் 2013 கவிதைகள்!

1. ஈரங்ககளை தேடும் இதயங்களாய்

நோன்பு மாதங்களில்
மரியாதை பேணாத
சாக்கடை நாவுகள்
புனித மாதத்தில்
குடித்து மகிழும் !

பாவங்கள்
அழிக்கப்படுகின்ற
தௌபா நூல்கள்
ஓட்டுரை கட்டித் தொங்கும் !

கேலிக் கூத்துக்களின்
உல்லாசப் பயணங்களை
விரும்புகின்ற -
அடிமைத் தனத்தினால்
செவிட்டுக் காதுகள்
ஊமையாய் கைக் கரணம் போடும் !

பொறாமை உணர்வுகளால்
செயலிழக்கப்பட்ட
போலி மனுஷத்துவம்
பூசப்பட்ட
பௌடர் முகங்கள்
வரலாற்றுப் பக்கத்தில்
வியர்வை வடிந்த துளிகளை
சுரந்து பீச்சும் ....!

நேசக் கரங்கள் மட்டும்
இறை தஸ்பீக்களின்
எண்ணிக்கைகளை அதிகரிக்கும் ..!.

வரண்டு போன பாலைவனங்களில்
ஈரங்ககளை தேடும்
இதயங்கலாய் ....!!
தாகம் போக்கும்
நீர் துளிகளாய்  ...!!


2. நெஞ்சமே நெருப்பாக வேகுதடா !

ஆகஸ்ட் 2013 கவிதைகள்!

இதயத்தில்  இருள் தன்னைக் களைந்தெடுத்து--நல்ல
இசை தரும் வினையாயாய்  குடைந்தெடுத்து !
உதயத்தில் பூபாளம்  மீட்டிடுவேன் --உன்
உயர்வுக்கு நல்வழி  காட்டிடுவேன் !

தீமையை முளையிலே  தீயிடுவேன் -- எந்த
தீயவர்  வாழ்க்கையையும்  திருத்திடுவேன் !
ஆமைபோல் அமைதியாய் வாழச் சொல்வேன் -நெஞ்சில்
ஆறுதல் வார்த்தைகள் கூறி வெல்வேன் !

பேசும் மொழி உயிர் மூச்சு என்பேன்-- மனிதருக்குள்
பேதைமை பாராதார் உயர்ந்தோரென்பேன் !
கூசும் நா  வேற்றுமை கூறி நின்றால் --மனிதா
கூடி  நாம் வாழ்ந்தாலோர் குறை வருமோ ?

எல்லா மதங்களும் ஒன்று என்பேன் --அதில்
எல்லா இறைவனும் ஒன்று என்பேன் !
இல்லை என்றால் தெய்வம் இவ்வுலகிலில்லை --மனிதா
அல்லாஹ்   துணையின்றி ஏதுமில்லை !

ஜாதிகள் ஆண்  பெண் இரண்டு என்பேன் --இங்கு
யாவரும் சரிசம  மாந்தரென்பேன் !
நீதி நிலை கெட்ட  மனிதர்களை --கண்டு
நெஞ்சமே நெருப்பாக வேகுதடா !

ஏழையர் யாவரென்  உடன் பிறப்பே --அவர்
ஏற்றம்காண சேவை  செய்திடுவேன் !
கோழையாய் வாழ்வதை நான் வெறுப்பேன்--அவர்
குறுக்கு வழி சென்றால் நான் தடுப்பேன் !

அன்பு தான் என் மனச் சாந்தி யென்பேன் --அதை
இதயத்தில் வைத்து நான் பேணிடுவேன்!
பண்பான மாந்தரை வர வழைபேன் --கவி
பாவாலே  அவர் வாழ வாழ்த்துரைப்பேன் ! 

கரைந்தோடும்  நெஞ்சங்கள் துணையிருப்பேன் !
நிலையில்லா  வாழ்வில் நான் நிறைந்திருப்பேன் --எந்த
நிலை வந்த போதும் நான் --வாழ்வில்
செய்நன்றி கொல்வேன் !

கூடாதே கூடாதகூட்டத்திலே --உன்
குணம் கெட்டுப் போகும் அக்கூட்டத்தினால் !
நாடாதே மது மாது சூது தன்னை --அவை
நாளெல்லாம்  உன் வாழ்வை அழித்தொழிக்கும் !

கண் முன்னே கயவரைக் கண்டேனென்றால்--நான்
காறியவர் முன் உமிழ்ந்திடுவேன் !
என் மனத் தோட்டத்தில் ஏங்குகிறேன் --நாட்டில்
இன மூன்றும் ஒற்றுமை காண்பதென்று ?

பொல்லாத காலமினி மாற வேண்டும் --அதில்
போலிகளும்  புரட்டல்களும் ஒழிய வேண்டும்
இல்லாமை நிலை முற்றாய் மாற வேண்டும் --பொருள்
இருப்பவர் இல்லாருக்கு ஈய வேண்டும் !

இந்த நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும் --இங்கே
இன மூன்றும் ஒற்றுமை காண வேண்டும்
வன்முறையால் நன்மைகள் சேர்க்கலாமோ --நல்ல
வழி  கண்டு அமைதி நிலை நாட்டலாமே !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


வாலியின் புகழ் வாழியவே.....! 

    - வே.ம.அருச்சுணன் – மலேசியா -
 
ஆகஸ்ட் 2013 கவிதைகள்!

தமிழைக் கற்றவருக்கு
ஆயுள் நீளம் என்பார்
உன் நாவில் விளையாடியது
தேன் சிந்தும் தமிழ் அல்லவா.....!
 
மனம் குளிர்ந்த தமிழன்னை
உமக்கு நீண்ட ஆயுளைத்தந்தார்
82 அகைவையிலும் இளசுகளின்
உள்ளங்களைத் துள்ளல் நடை போடவைத்த
வாலிபக் கவிஞன் நீ...........!
 
அற்புதக் கவிகளால்
கவியரசு கண்ணதாசன் மனம்
கவர்ந்த கவிஞனே
கலைஞர் காவியம் பாடியக்
காவியக் கவிஞனே
உனைத்தவிர வேறு யாரும் அப்படியொரு
காவையத்தைச் செதுக்கி இருக்க முடியாது..............!
 
பெற்ற அன்னை இட்டபெயர் இரங்கராஜன்
தமிழ் அன்னை சூட்டிய பெயர் வாலி
பாடல்களின் பிரம்மனே
வாலியின் பெயரே உனை
சிகரத்தில் நிறுத்தியது
மக்களின் மனங்களில் குதி போட்டு நின்றது.........!
 
நீ வடித்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை
பத்தாயிரம் பாடல்கள் தந்து
தமிழுள்ளங்களைக் குளிர வைத்தாய்
கேட்போர் வாழ்வை நிமிரவைத்தாய்............!
 
இரவும் பகலும் உன்
கடும் உழைப்பை கண்டு உன்னிடம்
இயற்கை உன்னிடம் தலை வணங்கியது
உழைப்பே மனிதனை உயர்த்தும்
என்பதற்கு  ஓர் உதாரணம்
தன்னம்பிக்கையின் சக்ரவர்த்தி நீ.........!
 
சோதனைகளைச் சாதனையாக்கிய
கவிஞ்சனே பல்லாண்டுகள் இன்னும்
வாழ்வாய் என்ற கணக்கில்
மண் விழுந்து விட்டதே
தரைமேல் பிறக்க வைத்த இறைவன்
எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்.........!
 
நீ மறைந்தாலும்
உன் வைர வரிகள் பல்லாண்டுகள்
எங்களை வாழவைக்கும்
வாழியவே உன் புகழ்.............!
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


வலி தேடும் ஒளிகள்

- மித்யா கானவி -

ஆகஸ்ட் 2013 கவிதைகள்!

எனக்கானவனே

நிஜமாக உனை
தழுவ முடியவில்லை
எம் நிழலாக -நீ
விட்டுச் சென்ற நினைவுகள்
நெஞ்சக் கூண்டை
பலமாய் அழுத்துகின்றன.

முன் சென்ற நாட்களில்-உனைப்
பாடிய தெருக்கள்
கூண்டிலிட்ட கிளியாகி
வாயடைத்து கிடக்கின்றன.

வாழ்த்திய மலர்கள்-இப்போ
முதிர்ந்த கனவுடன்
உதிர்ந்து கிடக்கின்றன. -உனைத்
தாங்கிய ஊர்திகள்
எலும்புக் கூடாய்...

நீ-எம்முடன்
வாழ்ந்த வீட்டில்
நெருஞ்சி முட்கள்
புரையோடி அரவங்கள்
ஆழ்கின்றன.

உன் சவக்குழிகளை
மண்டியிட்ட கைகள்
மனதோடு அழுகின்றன.

கால்கள் தேடுகின்றன
உன் தடங்களை-நீயோ
நியாத்திற்கு உரமிட்டு
எங்கோ மறைந்து போகிறாய்

நட்சத்திரங்களில் பாடல்
இசைக்கின்றாய்
ஆழக் கடலில்
நடனமிடுகின்றாய்

ஈரக் காற்றுடன்
எனக்கு மட்டும் கேட்கும் -
உன் பாடலை
யாரிடமும் பகிர்ந்திட முடியாது
இதயக் குடுவையில்
அடைத்து கொள்கின்றேன்

என் உயிருக்கு இன்னும்
பிச்சை கேட்டுக்கொள்வதால்..
                         
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.                          


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R