ஜூலை 2013 கவிதைகள் - 1

செங்குருவி

- எம். ரிஷான் ஷெரீப் -

மான்கள் துள்ளும் அவ் வனத்தில்
செங்குருவிக்கென இருந்ததோர் மரம்
தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு
நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம்
செங்குருவிக்குப் பிடித்தமானது

அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து
பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம்
சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில்
குளத்தில் விட்டு வரும் செங்குருவி
கிளையில் அமர்ந்திருக்கும்

தன் ஒற்றைக் கண்ணால் பார்க்கும் உதிர்ந்த மயிலிறகு
சொன்ன கதைகளையெல்லாம்
கேட்டுக் கேட்டுச் சலித்திருக்கும் செங்குருவி
வானவில் விம்பம் காட்டும்
தெளிந்த தடாகத்தைத் தன் பச்சை விழிகளால்
அருந்தித் திளைத்திருக்கும்

அச் செங்குருவிக்கின்று
எந்தத் தும்பி இரையோ
இல்லை எக் கிளைக் கனியோ

நடுநிசியொன்றில் அகாலமாய்
செங்குருவியின் பாடலொலிக்கக் கேட்பின்
அதன் ப்ரியத்துக்குரிய மரத்திலேறிய சர்ப்பம் குறித்த
செய்தியை அறிந்துகொள்ளும்
அல்லிப் பூக்களும்
குருவிச் சிறகு தொட்டுத் தனித்துப் போன
மேகங்களும்
பின்னர் துயரத்தில் கதறும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


யாரு அவரு?

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் -

ஜூலை 2013 கவிதைகள் - 1

தன்னலம் கருதாமல், அரசியலில் பதவிக்கு ஆசைப்படாமல் வாழ்ந்த தலைவரையே 'ஜாதி வளர்த்த தலைவர்' என்று தூற்றும் இந்தத் தமிழ்ச் சமூகம் நன்றி மறந்த தமிழ்ச் சமூகம் தான். இவரைப் போன்ற நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் என்னைப் போன்றவர்களுக்கு மத்தியில் இவரைத் தேர்தலில் தோற்கடித்த இந்த தமிழ்நாட்டுத் தமிழினம் நன்றி மறந்த இனம் தான். அவ்வப்போது நான் சந்திக்கும் நண்பர்களில் ஒரு சிலர் இவரைப் பற்றி 'சாதி வளர்த்த தலைவர், சாதி வளர்த்த முதல்வர்' என்று சொல்லுவார்கள். எனக்கு மனதிற்கு வருத்தமாகவே இருந்தது. அவ்வப்போது அந்த வார்த்தை என் மனதை வலிக்கச் செய்தது. அந்த வலி இன்று இந்தக் கவிதையைத் தந்திருக்கிறது.

யாரு அவரு – எந்த
ஊரு அவரு
விருதுநகரு – இந்த
ஊரு அவரு

விடுதலையுந்தான் பெற்றிடவே
பாடு பட்டாரு – அவரு
படிப்பைவிட்டு குடும்பம்விட்டு
சிறையைத் தொட்டாரு
    (யாரு அவரு)

மதியஉணவு திட்டத்தினை
கொண்டு வந்தாரு – அவரு
மனிதமதை மதிப்பதற்குக்
கற்றுத் தந்தாரு
    (யாரு அவரு)

குழந்தைகளின் கல்விக்காக
உதவி செஞ்சாரு – அவரு
வாழ்வினிலே அனுபவத்தை
மனதில் நெஞ்சாரு
    (யாரு அவரு)

குழந்தைகளின் சிந்தனையை
செதுக்கி வச்சாரு – அவரு
அரசியலில் நேர்மைதனை
தினமும் தச்சாரு
    (யாரு அவரு)

எந்தப் பள்ளிக்கூடத்தில
அவரும் கற்றாரு – அவரு
படிக்காத மேதையின்னு
பேரும் பெற்றாரு
    (யாரு அவரு)

தாய்மொழியில் மேடைதனில்
பேசி வந்தாரு – அவரு
நாடுபல நம்உடையில்
சுற்றி வந்தாரு
    (யாரு அவரு)

நாடு,மக்கள் நலம்பெறவே
வாழ்ந்து வந்தாரு – அவரு
தொண்டுசெய்ய வரந்தனையே
வாங்கி வந்தாரு
    (யாரு அவரு)

தனக்கென்று திருமணமும்
செய்யாதவரே – தன்
கட்சிவளர்க்க மற்றவரை
வையாதவரே
    (யாரு அவரு)

ஏறத்தாழ பத்தாண்டு
முதல்வர் ஆகினார் – இவரு
அரசரையே உருவாக்கும்
திறமை ஏகினார்
    (யாரு அவரு)

சாதியொழிக்க பாடுபட்ட
தலைவர் இவருதான் – புதுப்
பிரதமரையே பரிந்துரைத்த
இவரு பவருதான்
    (யாரு அவரு)

தான்நினைத்த நேருமகளை
தலைவர் ஆக்கினார் – அவள்
யாரென்று இவரையேதான்
திருப்பித் தாக்கினாள்
    (யாரு அவரு)

கருப்புநிறக் காந்தியென்று
போற்றி வந்தாங்க – அவங்க
தேர்தலிலே இவருக்குத்தான்
தோல்வி தந்தாங்க
    (யாரு அவரு)

விளக்கையணை சொல்லிவிட்டு
படுத்து விட்டாரு – பிறகு
படுத்தவுடன் நிம்மதியாய்
உயிரை விட்டாரு
    (யாரு அவரு)

தன்னலமே கருதாத
தங்கத் தேருதான் – அவரைக்
கேட்டாலே பாமரனும்
புகழும் பேருதான்
    (யாரு அவரு)

முடிவுகளை எடுப்பதிலே
மன்னன் தானுங்க – அவரு
போலவொரு மனுசனுந்தான்
இன்று வேணுங்க
    (யாரு அவரு)

இவர்போல மனுசங்களைப்
பெற்ற நாடுதான் – இன்று
இவரில்லாத் தமிழ்நாடு
ஊழல் காடுதான்
    (யாரு அவரு)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
************************************************

தந்தையர் தின சிறப்புக்கவிதை: அப்பா!

- தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி -

ஜூலை 2013 கவிதைகள் - 1

01) 
நான் அறிந்த
கட்டபொம்மனும்
கர்ண மகாராசனும்
எல்லாமே எனக்கு
என்னுடைய அப்பாதான்.
எனது எதிர்காலத்துக்கு
இன்றும்
சொல்லத்தெரிந்தது
“அப்பா போல வரணும்.”
நான் அறிந்த
கணிதமும் இலக்கியமும்
அப்பாதான்.

02) 
அப்பாவின்
கடின உழைப்புக்கு
அவரது தலைப்பாகைதான்
சாட்சியம்.
அதில் உப்பு பூத்திருக்கும்
அழகைக்காணும் போதெல்லாம்
எனக்குள்தான்
எத்தினை பூரிப்பு.
எத்தினை மாற்றம்.
அம்மாவின் அடுக்களை
பண்டத்தை விடவும்
எனது நாசிக்கு அதிகம்
பழக்கப்பட்டது
அப்பாவின் வியர்வை
நாற்றம்தான்.
முகம் ஒற்றிக்கொள்ளும்
தோள் துப்பட்டாவை
தலைப்பாகையாக
உடுத்திக்கொள்ளும் போதுதான்
இருக்கிறதே மிடுக்குää
ஏழு தலைமுறைக்கான
நிமிர்வு எனக்கு.

03) 
ஆனாலும்
வாழைக்குணம் அப்பாவுக்கு.
குலை போட்டும்
குனிவாய் வாழைகள்.
அப்பாவும் குனிகிறார்
நான் கனிவதற்காக.
சிறு வயதில்
அந்தக்குனிவில்
சவாரி விட்டவன் நான்.
ஆனால் எனது முதுகில்
யாரும் சவாரி
விட்டுவிடக்கூடாது
என்பதற்காகத்தானே
அப்பா இத்தனைக்கும்
கஸ்ரப்படுகின்றார்.

04) 
பள்ளி முடிந்தும்
வீடு திரும்பாத
என்னைத்தேடி
அம்மா தெரு ஏறுவா.
நான் வயல் இறங்குவன்.
எனது கால் கழுவி
வரப்பிருத்தி விடும் அப்பா
எனது சட்டையில்
அழுக்குச்சேராதிருக்க
சேறு குளிக்கிறார்
நெடுநாளும்.

05) 
அப்பா சேறு மிதித்திட்டு
வரப்புகளோடு
நடந்து வருவார்.
அதை படம்பிடிச்சு பெரிசாய்
சுவரில மாட்டோணும் என்று
எனக்குள் நெடுநாளும்
ரொம்பவே ஆசை.
நிறைவேறவே இல்ல.
கடதாசியை எடுத்து வரைஞ்சும்
திருப்தி காணாத நான்
கண்ணாடி முன்னே
அதிக நேரத்தை
செலவழிச்சிருவன்
வேசமிட்டு அப்பாபோல
மீசை வைச்சு
அழிச்சு அழிச்சு
நேர்த்தி வரும் வரைக்கும்.
ஆனால் அப்பாபோல
சுருட்டிழுப்பு ஒத்திகை பார்த்து
அவர் ஒத்தடம் கொடுத்த வடுக்கள்
இப்பவும்
எனது நடத்தையை
ஒழுங்காற்றிக்கொண்டிருக்கும்
அப்பாவின் இன்னுமொரு முகம்.

06) 
அப்பாவுக்கு
மூத்த பிள்ளை நான்தான்
ஆனாலும் தலைப்பிள்ளை
வயல்தான்.
அம்மாவை விடவும்
அவருக்கு நல்ல துணை
மயிலையும் சிவலையும்.
அப்பா அதிகம் நேசிப்பது
அவைகளைத்தான்.
அவரது
சொத்துச்சுகம் எல்லாமே
அந்த திண்ணை வீடும்
கொல்லைப்புறமும் தான்.
அப்பா கைகளை
தலையணையாகக்கொண்டு
(இ)ராஜ தூக்கம் போடும்
அந்த மாமர நிழலுக்கு
மட்டும்தான் அப்பாவின்
கனவுகளின் கனதி புரியும்.
அந்த தென்னைகளுக்குத்தான்
எத்தினை வயசு.
அதன் கீழிருந்து அப்பா
அண்ணாந்து விடும்
பெரு மூச்சில்தான்
அவற்றின் மூப்பை
அளவிட முடியும்.

07) 
அப்பாவுக்கு ஆயுசு கெட்டி.
பழஞ்சோற்றுல பசி போக்கிறதும்
மோரில தாகம் தணிக்கிறதும்தான்
அவரது உடல் தெம்பு.
ஆங்கே வீழ்ந்து கிடக்கும் மரங்களை
குற்றிகளாக வீடு சேர்க்கும்போது
நான்
அப்பாவின் உடல்
திரட்சிகளை
கணக்கெடுத்தவாறல்லவா
பின் தொடர்ந்திருக்கிறேன்.

08) 
எனக்கு
“புதியதொரு உலகை”
காட்டியது அப்பாதான்.
வயலில இறங்கி
நடக்க ஆரம்பிச்சிட்டா
அவர் பின்னே
எனது விடுப்பு கேள்விகள் போகும்.
நாட்டு நடப்புகள் அத்தினையும்
அப்பாவுக்கு அத்துப்படி.
ஆர்வமிகுதியால்
விடுமுறை நாள்களில் கூட
கட்டுச்சோற்றோடு வயலுக்கு
ஓ(டி)டுவன்.
அப்பா வயலில நிற்கிற
ஒவ்வொரு நிமிசமும் கூடக்கூட
வயல் காட்சி மீது பிடிப்பும்
அதிகரிச்சுக்கொண்டே போகும்.
பொழுது சாய்கிற
நாழிகை மீதுதான்
கோபம் அதிகமாக வரும்.
பலம் கொண்டவரை
நிலத்தை உதைப்பன்
வலிக்கு அப்பா மருந்திடுவார்.

09) 
இராத்திரி பூராவும்
எனது சுகமான தூக்கம்
அப்பாவின் நெஞ்சில்.
அவரது நெஞ்சு மயிர் பிடித்து
பழகிப்போன
இந்தக்கைகளுக்குள்
எழுதுகருவியை திணித்தது
என்னவோ அப்பாதான்.
ஆனாலும் அந்த
மண்வெட்டி பிடித்த
கைகளைப்பற்றி
எழுதும்போதுதானே
எந்த எழுதுகருவி
பிடிக்கும் கைக்கும்
பெருமை சேர்(க்)கிறது.
       
- முல்லைத்தீவிலிருந்-து (இலங்கை) ...
அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


நொறுங்கி போன எதிர் பார்ப்புகளும் , சின்ன பெண்ணின் சில கேள்விகளும்.....!

- மட்டுவில் ஞானகுமாரன் -

ஜூலை 2013 கவிதைகள் - 1

பட்சமுள்ள மாமாவுக்கு
மனுப்போட்டு மனுப்போட்டே களைத்து விட்டதால்
மாறுதலுக்காக
மன தேறுதலுக்காக எழுதியது...

இருள்  சிறையிருந்த மண்டேலா முதல்
அருள் சிறையிருக்கும்
மகேசுவரன் வரை அனைவருக்கும் போட்டாயிற்று 
பதில் தான் இதுவரை  வரவில்லை
நானே எழுதினது
ஒருக்கா
கவனத்தில எடுப்பிங்களா மாமா ...

என்னாடி பாத்தாலும்
உம் மாண்டி மாதிரியே நிக்கும்
சிங்கு தாத்தாவும்
கண்ணாடியணிந்த கருஞ்சூரியன் என
நீங்கள் புகழுரைக்கும் கலைஞர் தாத்தாவும் 
ஒண்ணா சேர்ந்து எங்களுக்கு
ஏதாச்சும் முடிவு பண்ணுவாங்களா  மாமா
தவறின் எம்மையே முடிவு
பண்ணுவாங்களா மாமா ....?

தோசாம் பிடித்தவர் போல
பார்க்கும்
இந்திய தேசத்திடம் இருந்து
இதை தவிர வேறு எதை தான்  எதிர்பார்க்கலாம் ...!

பட்டாசு வெடிச்சாலே படபடக்கும் நெஞ்சு 
பீரங்கி வெடியோசைக்கு
எப்படி துடிச்சிருக்கும்
விலா எலும்பில இரண்டை வெட்டி எடுத்தாச்சு
சீனா காரனோ
பாரத மாதாவோ யார் செஞ்ச ஆயுத தானமோ
என் பிஞ்செலும்பை உடைச்சிருச்சு

குற்றாலம் போல கொட்டும்
பெட்ரோல் கிணறில்லை
அதனால யாரும் அருகிலும் வரவில்லை 
உண்மைய எழுதபோய் உசிரு போயிடுமேன்னு
கழுவுற மீனுல நழுவி போறாங்க
சிலபேர்

கள்ளி காட்டு இதிகாசம் எழுதினீங்க
சந்தோசம்
கூடவே நம்மோட நாட்டு இதிகாசத்தை
எழுதவே மாட்டிங்களா ...?

உங்கள் கவிதைகள் போலவே
சில பாடலுண்டு என்னிடம்
அது கண்ணீர் பாடல்
சொல்லவா மாமா அதை  இப்ப
நாளை வந்தால் சிலவேளை
காணாம போயிருக்கும் நானும் பாடலும் ....

மாநாடு போட்டு விடிய விடிய கூவுறாங்க
கூவினாலும் கூட
எங்கள் இரவு மட்டும் விடியவேயில்லையே ...!

இறையாண்மை
இறையாண்மை என்று
எமை குறையாண்மை செய்தவரை எதிர்த்து
ஏன் மாமா பேராண்மையோடு நின்று
கவிதை செய்யவில்லை ...

கழுத்துக்கு
நடுக்கம் வரலாம்
உங்கள் எழுத்துக்கு வரலாமா மாமா

கோழி விரட்டவே
மூக்குத்தி எறிந்தவர்கள்
பசியை விரட்ட
விசமருந்தும் நிலைமையோ  சர்வேசா
இது  ஞா.... யா.... மா... மாமா   ....!

 
(இறுதி போரில் தனது எலும்புகளில் சிலதை இழந்து இயல்பு வாழ்வு நொறுங்கி போன சின்ன பெண்ணொன்று  தமிழ் கவிஞன் முன்னே வைக்கும் சில எதிர்பார்ப்புகள் )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 

பணமூட்டை புகை மூட்டமானது
   
- வே.ம.அருச்சுணன் – மலேசியா -
 
ஜூலை 2013 கவிதைகள் - 1

சோற்றில் மண்ணைப் போடுதல்
தர்மமாகுமா?
காற்றில் விசத்தைக் கலத்தல்
நீதியாகுமா?
தூய்மைக்காற்றை மாசுபடுத்தல்
நல்லதாகுமா?
மக்கள் தினம் அவதிபடுதல்
மனிதநேயமா?
நோய்கள் தாக்க வழிசெய்தல்
இதயம் தாங்குமா?
 
உலகெங்கும் உன் சொத்து
மதிப்பே பல கோடி
நாளெல்லாம் அதன் பேச்சு
நிம்மதியோ ஓடிப்போச்சு!
 
ஏழை சிறுகுப்பை எரித்தல்
பெரும் குற்றம் நொடியில்
நீதிதேவன் வாசலில் நிற்பான்
கனமுள்ளவன் காட்டை எரிப்பான்
காப்பதற்கும் அரசும் துணைநிற்கும்
தீ அணைப்பதற்கும் வானில்
பணமழை பெய்யும் நீதிகேட்டால்
முக்கியப் புள்ளிகளாம்
மௌனமே பதிலாகும் என்றும்
ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!
 
மக்கள்  அரசு நீதி காக்கும்
பேதமின்றி கண்ணீர் துடைக்கும்
பணமூட்டைகளின் கொட்டம் அடக்கும்
புகைமூட்டக் கண்ணாமூச்சுகள்
காற்றாய்ப் பறந்து போகும்!
 
இயற்கைதனை அழிப்போர்
இறைவனின் எதிரியென்போம்
படைத்தவன் நமக்களித்த
வாழ்வுதனைத் தட்டிப்பறிக்கும்
அரக்கனை அழிப்போம்
பணத்துக்குச் சோரம் போகும்
கொடியோரின் கருவறுப்போம்
தலைமுறையும் துளிர்க்காமல்
காவல் காப்போம்!
செயற்கைப் பேரிடர்
நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
அற்ப ஆயுளை முத்தமிடல் 
கொடுமையின் உச்சம்!  
 
இறைவனின் அருட்கொடை
மனிதன் இயற்கையை
நேசிப்பதும் சுவாசிப்பதும்
காப்பதும் வாழ்த்துவதும்
உரிமையும் பெற்றவன்!
 
இயற்கையைக் காக்க
உள்ளத்தையும் உயிரையும்
அள்ளித்தருவோம் மடமையில்
எதிர்போரைக் கிள்ளி எறிவோம்
அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
விட்டுவைப்போம் செழிப்பாய்
அதுவரையில் உயிராய்க்
காத்து நிற்போம்!
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R