நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -இலக்கியங்கள் எந்த மொழியில் எழுந்தாலும் அவற்றுள் சிலவற்றில் அறிவியல் சார்ந்த கருத்துச் செறிவுகள்; பற்றிப் படர்ந்திருப்பதை நாம் காணலாம். அன்று, நம்மில் அதிகமானோர் இவ்வாறான இலக்கியங்களை, இலக்கியக்கண்கொண்டு மாத்திரம் பார்த்ததினால், இலக்கிய நயத்தை மட்டும்தான் உள்வாங்கிக் கொண்டனர். அவற்றில் அமைந்த அறிவியல் அவர்களுக்கு அன்று புலப்படவில்லை. இன்றைய மக்களின் வாசிப்புப் பழக்கம் மாறுபட்டதனாலும், அறிவியல் ஆர்வம் கூடியதனாலும், அவர்கள் விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும்  ஒரே தட்டில் வைத்து ஆய்வு செய்யப் பழகி வருகின்றனர். இதனால், விஞ்ஞானிகள் இலக்கியத்தில் செறிந்துள்ள அறிவியலைத் தங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்திப் பல புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து அரும் பெரும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர். விஞ்ஞானிகளுக்கு ஆய்வின்பொழுது பலபல சந்தேகங்கள் எழுவது இயல்பு.  இவற்றை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும் பொழுது ஆய்வின் தரம் உயர்நிலை அடைகின்றது. 

 கல்வியறிவு
               “கற்க கசடறக் கற்பவை கற்றபின்
                  நிற்க அதற்குத் தக.” ------------   (திருக்குறள் 391)

இக் குறளை யாத்தவர் திருவள்ளுவர். இதன் பொருளாவது:- ‘கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். இவ்வண்ணம் கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்கவேண்டும்.’ என்பதாகும். ‘கற்க’ – எப்படி? ‘கசடறக் கற்க!’ – என்றார். ‘கற்றபின்’- என்ன? ‘நிற்க அதற்குத் தக’- கற்ற கல்விக்கமைவாக நிற்க! என்றார். ஒன்றே முக்கால் அடியில் திருவள்ளுவர் காட்டும் பாங்கிது.

மனிதன் வாழ்வு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வாழ்வுக்கு வேண்டுவது கல்வியாகும். வாழ்வு சீராக அமைவதற்கு அவனுக்குத் தேவைப்படுவது ஒரு வேலையாகும்.  அதற்கு அவனுக்குப் படிப்பு வேண்டும்.  மனிதனின் அக வளர்ச்சிக்குத் துணை நிற்கும் இலக்கியக் கல்வியே வாழ்க்கைக் கல்வியாகும். புற வளர்ச்சிக்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உதவுகின்றன. அகம், புறம் சார்ந்த வளர்ச்சிகள் இணைந்தவைதான் வாழ்க்கையின் முழுமையாகும். ஆனால் அகவொழுக்கமின்றி மனிதன் மனிதனாக வாழ முடியாது. மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டக்கூடியது அவன் பெற்ற பகுத்தறிவும், கல்வியுமாகும். சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதும் கல்வியே.   

‘கல்வி அழகே அழகு’, ‘கல்வியில்லாச் செல்வமும் கற்பில்லா அழகும் கடுகளவும் பிரகாசிக்காது’, ‘கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழை வேண்டும்’, ‘கல்வி கரையில, கற்பவர் நாள் சில’, ‘கல்வி கற்றும் கழுநீர்ப் பானையில் கைவிட்டது போல’, ‘கல்விக்கு ஒருவர்; களவுக்கு இருவர்’ என்பவை கல்வியைப் பற்றிக் கூறும் பழமொழிகளாகும்.
                              
                                “காலை எழுந்தவுடன் படிப்பு- பின்பு
               கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு…”

என்று பாரதியார் பாப்பாப் பாட்டு இசைத்துச் சென்றுள்ளார். காலையில் கற்கும் கல்வி பசுமரத்தில் ஆணி புகுவதுபோல் சுலபமாய்ப் பதிந்து விடும். இதனால் குழந்தைகள் காலையில் எழுந்து படிக்க வேண்டுமென்று பாரதியார் கூறியுள்ளார்.

(குறிப்பு:- தி.மு – திருவள்ளுவருக்கு முன்.  தி.பி – திருவள்ளுவருக்குப் பின்.)
சுவாமி விவேகானந்தர் (தி.பி. 12.01.1894—04.07.1933, கி.பி. 12.01.1863---04.07.1902): ‘எத்தகைய கல்வி ஒழுக்கத்தை உருவாக்குகிறதேர் மனத்தை உறுதிப்படுத்துகிறதேர் அறிவை விரிவாக்குகிறதேர்  எதன் மூலம் ஒருவன் தன்னையே சார்ந்திருக்க முடியுமோ அத்தகைய முழுமையான மனிதனை உருவாக்கும் கல்வியே நான் வேண்டுவது.’ என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

இப் பெரு நோக்கங்களை நிறைவேற்றும் அளவுக்கு நம் மத்தியில் நிலவும் கல்வி முறை அமைந்துள்ளதா என்பது கேள்விக்குரியதாகும். பயன்பாடு, பணிவு, பண்பாடு, ஆகியவற்றைக் கல்வியானது அளிக்க வேண்டும். பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்ளக் கூடிய கல்விமுறைதான் இன்று நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டப்படுவதாகும். அறிவியல் வளர்ச்சி நீண்ட பெரிய உலகைக் குறுக்கி வைத்து விட்டது. அதே நேரம் மனிதநேயம் மங்கி மறைந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றது.   

இன்று பட்டம் பெறுவதற்கும் பொருள் ஈட்டுவதற்கும்தான் கல்வி வேண்டப்படுகிறது.  ஆனால் இன்று அறிவியல,; தொழில்நுட்பம், ஆய்வியல் போன்றவற்றில் மாணவர்கள் கவனம் செலுத்தி  வருவதை நாம் போற்றவேண்டும். சிறந்த இலக்கியங்கள் என்றும் சமுதாய மாற்றத்துக்கு உறுதுணையாக உள்ளன. சிறந்த இலக்கியங்கள் ஆய்வைப் பெருக்கி, திறனை வளர்த்து, அறிவை விரித்து, ஆக்கம் உண்டாக்கி, மொழி வளம் கொடுத்து நிற்கின்றன.

தமிழன் வாழ்வியல்

தமிழர் வாழ்;வியலில், அறவியலும் அறிவியலும் இரண்டறப் பற்றிப் படர்ந்து ஆல் போல் விழுதெறிந்த விருட்சமாய் அமைந்துள்ளன. பண்டைத் தமிழர் தம் வாழ்வியலை அகம், புறம், என்று இரு கூறாக வகுத்துள்ளனர். புறம் புறவாழ்வில் மேற்கொண்டு இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அறநெறிப்பற்று ஆகியவற்றைப் பேணுவதற்கு மேற்கொள்ளும் ஆண்மை சார்ந்த பணிகளும், போரியல் மரபும் இப் புறத்தில் பேசப்படுகின்றன. அகம் அக வாழ்வில் அன்பின் எழுச்சி சார்ந்த நெறியோடு வாழ்ந்ததன் சிறப்பினைக் கூறுகின்றது. இங்கு கன்னியொருத்திக்கும் காளையொருவனுக்கும் இடையே வளரும் காதலன்பு பற்றிப் பேசப்படுகின்றது.

ஒருதலைக் காமம், அன்புடைக் காமம், பொருந்தாக் காமம் ஆகிய மூன்று நிலைகளை முறையே கைக்கிளை எனவும், அன்பின் ஐந்திணை எனவும், பெருந்திணை எனவும் இலக்கண நூலார் கூறுவர். அன்புடைக் காமம் என்பதைக் குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல் திணை என ஐவகை ஒழுக்கக் கூறுகளாக வகுத்துள்ளனர். அதன்படி  ‘ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்’ என்ற தாரக மந்திரத்துடன் வாழ்ந்தவன் தமிழன். 

கலையும் விஞ்ஞானமும்

இணைந்திருப்பதே வாழ்க்கையின் சிறப்பாகும். அதேபோன்று கலையும், விஞ்ஞானமும் இணைந்தே இருத்தல் வேண்டும். மேற்கு நாடுகளில் விஞ்ஞானம் அதி உயர் நிலைக்கு வளர்ந்துள்ளது. ஆனால் அங்கு  வாழ்வியல் வளரவில்லை. ஈழத்தில் வாழ்வியல் வளர்ந்த அளவிற்கு விஞ்ஞானம் வளரவில்லை. கற்பனைத் திறனுடன்தான் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. கலையும், விஞ்ஞானமும் பற்றிச் சில செய்திகள் இவை:-

எச்.ஜி.வெல்ஸ் (தி.பி.21.09.1897—13.08.1977, கி.பி. 21.09.1866—13.08.1946):- இவர்  புகழ் பெற்ற விஞ்ஞானக் கற்பனை சார்ந்த ஆக்கங்கள் எழுதுவதில் வல்லவர். இவர் ‘இயந்திர நேரம்’, ‘உலக யுத்தம்’, ‘காணமுடியாத மனிதன்’, ‘சந்திரனில் முதல் மனிதன்’ ஆகிய சிறந்த இலக்கியங்களை மக்களுக்குக் கொடுத்துள்ளார். 1969ஆம் ஆண்டில் முதல் முதலாகச் சந்திரனில் காலடி பதித்த ரஸ்ய விஞ்ஞானிகளுக்கு ‘சந்திரனில் முதல் மனிதன்’ என்ற  கட்டுரை  உந்துகோலானது  எனலாம்.  மேலும், இவர்  ‘வரலாற்றின் எல்லைக்கோடு’, மனித குலத்தின் வேலை, செல்வம். நற்பேறு’ போன்ற சமுக அரசியல் கோட்பாடுகளுடன் சேர்ந்த ஆக்கங்களை ஆக்கித் தந்து தான் ஓர் இலக்கியவாதி என்பதையும் நிரூபித்துள்ளார்.

யோர்ஜ் ஓர்வெல் (தி.பி. 25.06.1934—21.01.1981, கி.பி. 25.06.1903—21.01.1950):- இவர் இலக்கியம், கவிதை, விஞ்ஞானக் கற்பனைக் கதை ஆகிய துறைகளில் எழுதும் ஓர் ஆங்கில எழுத்தாளர். இவர் எழுதிய பல நூல்களில் ‘யானை வேட்டையாடல்’ – (1936), ‘விலங்குப் பண்ணை’ – (1945), ‘திமிங்கிலங்களுடன்’- (1949), போன்றவை விஞ்ஞானத் தொடர்புடன் மிகவும் புகழ் வாய்ந்தனவாய் அமைந்துள்ளன.

அரிஸ்டாட்டில் (,தி.மு.353—291, கி.மு.384—322): இவர் ‘அறிவாளிகளிள் தந்தை’ என்று பெயர் சூட்டப்பெற்ற ஒரு கிரேக்க விஞ்ஞானி. இவர் தி.மு. 299ஆம் ஆண்டில் நம் பூமியானது தட்டையில்லை என்றும், அது ஓர் உருளையென்றும் கூறினார். இவர் மிகச் சிறந்த கலை ஞானியும், அறிவியல் மேதையுமாவார். இவர் பல கல்விச் சாலைகளை உருவாக்கி அறிவியல,;அறிவியல் கோட்பாடு போன்ற கற்கைகளை மக்களுக்குக் கற்பிக்க உதவினார்.

சந்திரசேகர் (தி.பி.19.10.1941—21.08.2026, கி.பி.19.10.1910—21.08.1995):-இவர் ஒர் இந்திய விஞ்ஞானி. இவர் 1937ஆம் ஆண்டிலிருந்து இறக்கும்வரை அமெரிக்காவில் வாழ்ந்தார். அங்கு சிகாகோ சர்வகலாசாலையில் கடமையாற்றி ஆய்வுகள் நடாத்தினார். இவர் சேர். சி.வி. இராமனின் (தி.பி.07.11.1919—21.11.2001, கி.பி. 07.11.1888—21.11.1970) மருமகனுமாவார். 1983ஆம் ஆண்டு பௌதிகத்துக்கான நோபல் பரிசை விஞ்ஞானி சந்திரசேகர் பெற்றுக்கொண்டார். இவர் கலை ஆர்வம் கொண்ட விஞ்ஞானி. 

சேர் ஆர்தர் சி. கிளார்க் (தி.பி. 16.12.1948—19.03.2039, கி.பி.16.12.1917—19.03.2008):- இவர் ஓர் ஆங்கில விஞ்ஞான ஆராய்வாளர், புதிது கண்டுபிடிப்பாளர், வாய்க்கும் என்ற கோட்பாளர் ஆகிய பன்முகங்களுடன் வாழ்ந்தவர். இவர் பல விஞ்ஞானக் கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார். அவைகளில், ‘2001: விண்வெளி நீள்பயணம்’ –(1968);, ‘2010: நீள்பயணம் 2’- (1982), ‘3001: இறுதி நீள்பயணம்’ –(1997);, ‘குழந்தைப்பருவம் முடிவு’ –(1953), என்பன அவருக்குப் புகழைத் தந்தன. இன்னும், இவர் ‘துணைக்கோளின் செய்தி இணைப்பு’ என்ற கருப் பொருளில் 1945ஆம் ஆண்டில் ஒரு விஞ்ஞானக் கட்டுரையை எழுதி வெளியிட்டார். ‘விண்வெளியின் முன்விளைவு’, ‘இராமனுடன் கூடுமிடம்’, ‘செவ்வாயின் மண்’ ஆகியவற்றையும் நூற்றுக்கு மேற்பட்ட வேறு  இலக்கிய ஆக்கங்களையும்; இவர் வெளியுட்டுள்ளார். 

இலக்கியத்தில் விஞ்ஞானம்

 இலக்கியத்தில் பரவலாக நிறைந்த விஞ்ஞானம் பொதிந்திருக்கின்றது. அறிவியலார்க்கும் இலக்கியவாதிகளுக்கும் அமைந்துள்ள உள் நோக்கு, புற நோக்கு, முற்போக்குச் சிந்தனை, உணர்வு, தத்துவம், ஆக்கம் ஆகியவை அத்தனையும் பொதுவானவையாகும். இலக்கியவாதிகளை வெறும் படைப்பாளிகள் என்ற பட்டியலில் சேர்த்துவிட முடியாது. அவர்களின் ஆக்கங்களில் இடம் பெறும் அறிவியல் சிந்தனைகள் பல உள. அவை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாய் அமைகின்றன. இதோ சில உதாரணங்கள்:-

தொல்காப்பியர் (தி.மு.680 – கி.மு. 711 ):- (1) இவர் யாத்த தொல்காப்பியம் தமிழின் முதல்; இலக்கண, இலக்கிய நூலாகும்.   உயிர்களின் பாகுபாட்டை ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை வகைப்படுத்தி ஒரு மேல்நிலை விஞ்ஞானியை விஞ்சும் முறையில் நிரல்படுத்திக் கூறியுள்ள பாங்கினையும் காண்கின்றோம்.
             “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
              இரண்டறி வதுவே அதனொடு நாவே
              மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
              நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
              ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
              ஆறறி வதுவே அவற்றொடு மனனே
              நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.”- (பொருள்.571).

(2) இந்தியத் தாவர விஞ்ஞானி மேதை ஜே.சி. போஸ் (தி.பி.30.11.1889—23.11.1968, கி.பி. 30.11.1858—23.11.1937) அவர்கள் தாவரங்களுக்கு உயிர், உணர்ச்சி, அறிவு என்பன உள்ளன என்பதை நிரூபித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றுக்கொண்டார். இந்த ஆய்வுக்குத் தொல்காப்பியர் சூத்திரம்தான் அடிப்படையாக அமைந்ததென்பர்.

இன்னும், தாவர இனங்கள் பற்றியும், உயிர் இனங்கள் பற்றியும், அவற்றின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் பற்றியும் உலகுக்கு அளித்த சி.ஆர். டார்வின் (தி.பி. 02.02.1840—1913, கி.பி. 02-02-1809—1882) அவர்களின் ஆய்வுக்கு முன்னோடியாய் அமைந்தவர் தொல்காப்பியரேயாவார்.

(3) இந்த உலகம் ஐம்பெரும் பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கையால் ஆனது என்பது அறிவியல் உண்மை. இவ்வுண்மையைத் தொல்காப்பியர் இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2,700) ஆண்டுகளுக்கு முன்னால்,
                   
              “நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்
               கலந்த மயக்கம் உலகம் ஆதலின்….”-(தொல்-பொருள்-மரபியல-; 635)

என்ற பாடல் வரிகளில் நிறுவியுள்ளமை போற்றற்குரியதாகும். இவ்வண்ணம் தொல்காப்பியர் ஒரு விண்வெளி விஞ்ஞானியாய் நிலவெளி, விண்வெளி விஞ்ஞானம் பேசுவதையும் காண்கின்றோம்.

புறநானூறு:- (1) கடைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் உள்ள அறிவியல்  சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில்:- ‘செஞ்ஞாயிற்றின் வீதியும், அஞ்ஞாயிற்றின் இயக்கமும், இயக்கத்தால் சூழப்படும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானமும், என்றிவற்றைத் தாமே அவ்விடஞ் சென்று அளந்து அறிந்தவரைப் போல, அவை இப்படிப்பட்டவை என உரைக்கும் அறிவுடையோரும் உளர்’ என்று விண்ணியல் விஞ்ஞானம் விவரமாய்ப் பேசப்படும் இலக்கிய விந்தையைக் காண்கின்றோம்.
           
            “செஞ்ஞா யிற்றுச் செலவும்
             அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்,
             பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
             வளி திரிதரு திசையும்,
             வறிது நிலைஇய காயமும், என்றிவை
             சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
             இனைத்து என்போரும் உளரே,… --(புறம். 30 1-7)
                           -உறையூர் முதுகண்ணன் சாத்தனார்-
                    
                   (செலவும் - வீதியும்.  காயம் - ஆகாயம்.)
(2) ஐம்பெரும் பூதங்களான (i) நிலனையும், (ii) வானையும், (iii) காற்றையும், (iஎ) நெருப்பையும், (எ) நீரையும், உலகம் கொண்டுள்ளது என்று புறநானூற்றில் முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் சங்கப் பாடலில் பாடியுள்ளார்.

                   “மண் திணிந்த நிலனும்,
                    நிலம் ஏந்திய விசும்பும்,
                    விசும்பு தைவரு வளியும்,
                    வளித் தலைஇய தீயும்,
                    தீ முரணிய நீரும், … - (புறநானூறு – 02)

இதில் மண் செறிந்த நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும் உண்டாயின என்ற அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.
கம்பராமாயணம்:- இராவணன் குபேரனிடமிருந்து புட்பக விமானத்தைக் கவர்ந்து வந்தான். இதில் எத்தனை பேரும் ஏறலாம். இவ்வண்ணம் கம்பராமாயணத்தில் வானியல் விஞ்ஞானம் பேசப்பட்டுள்ளது. இக்காலத்தில் பறக்கும் விமானக் கண்டுபிடிப்புக்கு புட்பக விமானம் ஏதுவாய் அமைந்ததென்பர்.

சுக்கிரீவன் சுட்டிக் காட்டிய மராமரங்கள் ஏழினையும் இராமன் தனது சரமொன்றினால் ஒரே சமயத்தில் துளைக்கும்படி ஏவினான். அச் சரமானது அவ்வேழு மராமரங்களையும் துளைத்து ஊடுருவிச் சென்று மீண்டும் இராமனை வந்தடைந்தது. அன்றைய சரமொன்றின் வேலையைத் தற்பொழுது விஞ்ஞான முதிர்ச்சி பெற்ற விண்கலன்கள் செய்கின்றன. இதற்கு அடிகோல் இராமன் சரமென்றே கூறலாம்.

சிலப்பதிகாரம்:- சங்கம் மருவிய காலத்தில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ‘திங்களைப் போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! மாமழை போற்றுதும்!’ என்று வானியல் விஞ்ஞானம் பேசப்படும் இலக்கிய நூலின் பெருநோக்கைக் காண்கின்றோம். இவைகள் யாவும் பின்னாளில் விஞ்ஞானிகளை ஆற்றுப்படுத்தி அறிவியல் சிந்தனைகளை ஊட்டி அறிவியல் கண்டுபிடிப்புகளாக உருவாயின.

மாணிக்கவாசகர்:- தி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மணிவாசகர் சிவபுராணத்தில் ‘புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனிவராய், தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்து சலித்து விட்டேன்’; என்று பரிணாம வளர்ச்சி விஞ்ஞானம் பேசுகின்றார். ‘விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய், எண் இறந்து எல்லை இல்லாதானே..’-(சிவபுராணம்) என்றும், ‘எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு’- (திரு எம்பாவை) என்றும்  விண்வெளி விஞ்ஞானம் பேசுகின்றார் மணிவாசகர்.

ஒளவையார்:- “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக,; குறுகத் தறித்த குறள்.” என்று ஒளவையார் திருக்குறளைப் பாராட்டித் திருவள்ளுவ மாலையில் கூறியுள்ளார். அணு விஞ்ஞானம் பற்றி ஒளவையார் அறிந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.
 
திருமந்திரம்:- ‘ஆராய்ந்தறியும் அறிவுக்கும் எட்டாத, அணுவுக்குள் அணுவான நுண்ணணுவானவள் பராசக்தி’ (ஆயும் அறிவுங் கடந்தணு ஆரணி- 1239) என்றும், ‘அணுவை ஆயிரமாகப் பிரித்து அணுவுக்குள் அணுவாகவுள்ள பரமாணுவான ஆதிப்பிரான்’ (அணுவில் அணுவினை ஆதிப் பிரானை, அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு- 2008) என்றும் திருமூலர் அணுவின் தன்மை அறிந்து அதனுடன் இணைந்து விளையாடும் பாங்கினையும் பார்க்கின்றோம்.

யூல்ஸ் வேர்ன் (துரடநள ஏநசநெ- தி.பி. 08.02.1859—24.03.1936, கி.பி. 08.02.1828--24.03.1905):- இவர் ஒரு பிரான்சு நாட்டினர்; ‘விஞ்ஞானக் கற்பனைக் கதைகளின் தந்தை’ என்று பெயர் பெற்றவர்.     ‘கடலின் கீழ் 60,000 மைல்கள்’ – (1870);, ‘பூமியின் மையம்  நோக்கிய பயணம்’ – (1864),   ‘உலகத்தைச் சுற்றி 80 நாட்கள்’ – (1873);, ‘மறைவடக்கமான தீவு’ –(1874);, ‘பூமியிலிருந்து சந்திரனுக்கு’- (1865);, ஆகிய சில நூல்கள் அவரின் இலக்கியப் படைப்புகளாகும். இவரின் இலக்கியப் படைப்புகளில் விஞ்ஞான வளர்ச்சி, விண்வெளிப் பிரயாணம், கடல் ஆதிக்கம், சந்திரனில் கால் பதித்தல் ஆகிய விஞ்ஞான அறிவியல் செறிந்து கிடக்கின்றன.

யாகசாலை:- அன்றைய யாகசாலையானது இன்றைய பௌதிக விஞ்ஞானத்தின் விளைவால், புதியதொரு தோற்றமெடுத்து நவீன முறையில் நிறுவப்பெற்ற தொழிற்சாலைகள் தோன்றியுள்ளன. ஆங்கே இயற்கையான மூலப் பொருட்கள் பண்பட்ட பொருள்களாகத் திருத்தியமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக வினியோகம் செய்யப்படுகின்றன. அன்று யாகசாலையில் மந்திரத்தால் சில செயல்கள் நிகழ்ந்தன. இன்று தொழிற்சாலைகளில் எந்திர சக்தியால் பல பயன்படும் செயல்கள் நிகழ்கின்றன. விஞ்ஞானப் பயன்பாடு மக்கள் வாழ்வியலையும், அறிவியலையும் மேன்மைப்படுத்தி நிற்கின்றது.

உலகம்:- சங்க காலத் தமிழனுக்கு அவன் வாழும் பூமிதான் அவன் கண்ட உலகம். அவன் இலக்கியம் படைக்கும் பொழுதும் அவன் சிந்தனைகள் எல்லாம் உலகத்தோடு ஒட்டியனவாய் அமைந்ததைக் காண்கின்றோம். அவன் உலகத்தை நேசித்து, அதனுடன் சேர்ந்து, இணைந்து, ஒட்டி வாழ்ந்தான்.

திருக்குறளில் ‘உலகம’;, ‘உலகு’ என்று திருவள்ளுவரும், சிலப்பதிகாரத்தில் ‘’உலகு’ என்று இளங்கோவும,; மணிமேகலையில் ‘உலகம் திரியா’ என்று  சீத்தலைச் சாத்தனாரும், கம்பராமாயணத்தில் ‘உலகம் யாவையும்’ என்று கம்பரும், பெரியபுராணத்தில் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று சேக்கிழாரும், திருமுருகாற்றுப் படையில் ‘உலகம் உவப்ப’ என்று நக்கீரனும், நன்னூலில் ‘மலர்தலை உலகின்’ என்று பவணந்தி முனிவரும், அகவலில் ‘உலகத்தீரே! உலகத்தீரே!!’ என்று கபிலரும், புறநானூற்றில் ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்று கணியன் பூங்குன்றனாரும் விஞ்ஞான உலகை முன்நிறுத்திப் பாத்தொடுத்துப் பரவசமடையச் செய்துள்ளனர். 

விஞ்ஞானக் கல்வி

‘படிக்கையிலே தொல்லை இருக்கும்: படித்து முடிக்கையிலே முற்றும் மகிழ்ச்சி – முடித்தபின் தொட்டதெல்லாம் வெற்றி, துயரின்றி வாழலாம் கட்டாயம் கல்வி பயில்’ என்பது பாரதிதாசன் வாக்கு. விஞ்ஞானம்  ஒரு தத்துவத்தின் கீழ் இயங்கி வந்தது. அது இன்று பல கிளைகளாகப் பிரிந்து தனித் தனித் துறைகளாகச் செயல்பட்டு வருகின்றது. அன்று விஞ்ஞானக் கல்வியை விஞ்ஞானக் குழுக்களே கற்பித்து வந்தன.

‘பௌதீக சாஸ்திரங்கள் மாணாக்கர்களின்; வாழ்விற்குப் பயன்படாத நிலையில் படிப்பிக்கப்;;படுகின்றன’ என்று காந்தி அடிகள் வேதனையுடன் கூறினார். சிந்திக்கும் திறனற்ற இளைஞர்களால் சமுதாயத்தை எதிர்கொள்ள இயலவில்லை. தம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும் திறனில்லை. கல்விக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பற்ற நிலையே காணப்படுகிறது,

விஞ்ஞானக் கல்வி ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்பட்டது. நவீன விஞ்ஞானக் கல்வியை ஏற்றுக் கொள்ளும்  வகையில் நம் சமுதாய அமைப்பு இருக்கவில்லை. அதனால் பயனுள்ள விஞ்ஞானப் பாடத் திட்டங்களும், ஆய்வக வசதிகளும், தொழில் நுட்பங்களும் கல்விக் கூடங்களை நாடவில்லை. புரியாத விஞ்ஞானத்தைப் புரியாத மொழியில் பயிலும் முறை விஞ்ஞான அறிவுக்கும் வளர்ச்சிக்கும் தடை போட்டது. மக்கள் அறிவு வளர்ச்சி குன்றியதால் பண்பாட்டுச் சிதைவுகளும் ஏற்பட்டன. நடைமுறைக்கு ஒவ்வாத கல்விக் கொள்கையால் கல்வியின் தரமும் குன்றியது.

விஞ்ஞானக் கல்வி, வெறும் ஏட்டுக் கல்வியாய் அமையாது பயன்பாட்டோடு கூடிய அறிவியற் கல்வியாக அமையவேண்டும். இன்று விஞ்ஞானக் கல்வி தொழில் வாய்ப்பைப் பெறக்கூடியதாய் மாற்றம் பெற்று வருகின்றது. விஞ்ஞானக் கல்வி முறையான வாழ்க்கையைத் தரும் என்று எண்ணிய இளைஞர்கள் இன்று மனமுடைந்தவர்களாய் உள்ளனர். வாழ்க்கைக்கு அறிவும் பண்பும் தேவை. கல்வியால் பெறும் அறிவும், பண்பும் வாழ்க்கைக்கு உதவ வேண்டும். இவ்வாறான கல்வி முறை அமையவேண்டும்.

விஞ்ஞானத்தின் ஆக்கமும் அழிவும்

விஞ்ஞானிகளின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் முதிர்வு நிலைகள் அவர்களின் ஆய்வின் போது மனத்தில் எழும் சந்தேகங்களிலும், கேள்விகளிலும்தான் தங்கியுள்ளன. எல்லா விஞ்ஞானிகளும் தமது கண்டுபிடிப்புகள் உலக மக்கள் அனைவருக்கும் நன்மையளிக்கும் என்ற பெரு நோக்குடன் ஆய்வுகளை நிகழ்த்துகின்றனர். ஆனால் எல்லாக் கண்டுபிடிப்புகளும் சமுதாயத்துக்கு ஆக்கத்தையும் அழிவையும் தருவனவாய் அமைகின்றன. ஆக்கத்தைவிட அழிவுகள்தான்  கூட என்றும் கூறலாம்.

ஆல்பிரடு நோபெல் (யுடகசநன ழேடிநட – தி.பி.21.10.1864—10.12.1927, கி.பி. 21.10.1833 – 10.12.1896)  என்னும் சுவீடன் நாட்டு விஞ்ஞானி வெடிபொருளைக் கண்டுபிடித்தார். இதை மக்கள் அழிவு வேலைகளுக்கே பெரிதும் பயன்படுத்தினர். யுத்த காலத்தில் அணு குண்டு, வெடி குண்டு, எறி குண்டு, துப்பாக்கிகள் போன்றவற்றின் பயன்பாட்டால் இறந்துபட்ட மக்கள் தொகையினை நாம் அறிவோம்.

இவ்வுலகில் சென்ற நானூறு ஆண்டுகளாக விஞ்ஞானம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இயற்கையை விஞ்ச வேண்டுமென்ற விஞ்ஞானிகளின் ஆய்வின் வேகம,; மக்கள் மத்தியில்  ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது என்பது உண்மையாகும்.

விஞ்ஞானத் துறைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இயங்குவதில்லை. அவற்றுள் பலவும் தனித்து இயங்குவதால் மனித சமுதாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கு மிக வேண்டப்பட்ட காற்று, தண்ணீர் என்பன மாசுபட்டதால், உயிரினங்கள் அனைத்துமே அழிவை நோக்கிய வண்ணம் உள்ளன. தற்பொழுது மாசடைதல் ஓர் உலகப் பிரச்சினையாய் அமைந்து வருகின்றது.

அறிவியல் விஞ்ஞானம்  மனித வாழ்வின் வெற்றிக்கு உகந்த ஆக்கங்களை வழங்கவில்லை என்று கூறலாம். ஆனால், மூடபக்திக்கு எதிராக, கொடு நோய்களுக்கு எதிராக, சுற்றாடற் பாதுகாப்பிற்காக, வளங்களைக் காப்பதற்காக, உலக அமைதிக்காக ஆகிய சமுகம் சார்ந்த போராட்டத்திற்கு விஞ்ஞானம் உதவி நிற்கின்றது.

அன்றைய தமிழனிடம் ஆட்கொல்லி நோய் தோன்றவில்லை. பின்னாளில் மக்களிடையே எழுந்த பண்பாட்டுச் சீரழிவினால் ஆட்கொல்லி நோய் தோன்றியது. தோன்றிய நோயைத் தணிக்க விஞ்ஞானம் உதவுகின்றது. ஆனால் தமிழர் தம் கோட்பாடாம் ‘ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்’ என்னும் பண்பே அவர்களுக்கு என்றும் மருந்தாக அமைந்திருந்ததைக் காண்கின்றோம். ஆட்கொல்லி நோய்க்கு அகப்படாதது இல்லற வாழ்வியல் இன்பம் என்பதை  பண்டைத் தமிழர் நிரூபித்துக் காட்டியுள்ளனா.; ஆட்கொல்லி நோய்தோன்றாதிருக்க இன்னும் விஞ்ஞானத்தால் விடைகாண முடியவில்லை.

முடிவுரை

இதுகாறும் தமிழர் வாழ்வியல், அறவியல், அறிவியல், அறம், புறம், ஒழுக்கக் கல்வி, அறிவுக் கல்வி, தாய்மொழிக் கல்வி, கலையும் விஞ்ஞானமும், இலக்கியத்தில் விஞ்ஞானம், மரபியல், புல், பூடு, புழு, மரம், மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதன், பேய், கணங்கள், அசுரர், முனி, தேவர் ஆகிய பரிணாம வளர்ச்சி, இலக்கியத்தில் ஞாயிறு, திங்கள், மாமழை, அணு விஞ்ஞானம், ஓரறிவிலிருந்து ஆறறிவு உயிரினங்கள், ஐம்பூதங்களான நிலம், தீ, நீர், வளி, விசும்பு, யாகசாலையில் எழுந்த மந்திரங்கள், தொழிற்சாலைகளில் இயங்கும் எந்திரங்கள், விஞ்ஞானக் கல்வி, விஞ்ஞானத்தின் ஆக்கமும் அழிவும் போன்ற விடயங்கள் மேலே பேசப்பட்டுள்ளன. வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு விஞ்ஞானப் பாடங்களும், கலை இலக்கியங்களும், மொழி அறிவும் மிக மிக வேண்டற்பாலன. கல்வி முழுமையடைய வேண்டுமெனில் அங்கு விஞ்ஞானப் பாடங்கள் அமையவேண்டும். வாழ்க்கையானது முழுமையடைவதற்கு கலை, இலக்கியங்கள் நிரம்பத் தேவைப்படுகின்றன. நவீன உலகம் சமைக்க, கலை ஆர்வமும், இலக்கிய இன்பமும், விஞ்ஞான அறிவியற் பயனும், தாய்மொழி அறிவும், அறநெறி வாழ்க்கை முறையும் மிக மிக வேண்டற்பாலனவாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R