அவுஸ்திரேலியா மெல்பனில்: முருகபூபதியின் "சொல்லவேண்டிய கதைகள்" நூல் வெளியீடும் 'ரஸஞானி' ஆவணப்படம் திரையிடலும்! - தகவல்: முருகபூபதி -எழுத்தாளர் முருகபூபதிஇலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு விழாவும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall - Gower Street, Preston 3072) நடைபெறும். 'சொல்லவேண்டிய கதைகள்' யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் புதிய வெளியீடாகும். இந்நூல் முருகபூபதியின் 21 ஆவது நூல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரஸஞானி ஆவணப்படம் - எண்ணமும் எழுத்தும் : எழுத்தாளர் செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி. ஒளி, ஒலிப்பதிவு, தயாரிப்பு: கலை, இலக்கிய ஆர்வலர் மூர்த்தி. பின்னணிக்குரல் வானமுதம் வானொலி ஊடகவியலாளர் நவரத்தினம் அல்லமதேவன்.

முருகபூபதி வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் இலக்கியப்பலகணி என்ற பகுதியில் தொடர்ந்து பத்திக்கட்டுரைகள் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. திருமதிகள் ஜெஸி ரவீந்திரன், சாந்தநாயகி கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி, சித்ரா லயனல் போப்பகே, கமிலா ஹனிஃபா, யாழ். இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் விக்ரோரியா கிளையின் தலைவர் திரு.' லயன்' சக்தி கிருஷ்ணபிள்ளை, மூத்த கல்விமான் யூசுப் முஸ்தபா, கலாநிதி மு. ஶ்ரீ கௌரிசங்கர் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைப்பர். இலங்கையின் மூத்த எழுத்தாளர் (அமரர்) மருதூர்க்கனியின் மகள் மருத்துவ கலாநிதி (திருமதி) வஜ்னா ரஃபீக், தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழா, செல்வி மோஷிகா பிரேமதாசவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும். செல்வி ஹரினி ஶ்ரீதரன் தமிழ்வாழ்த்துப்பாடுவார். திருமதிகள் கலாதேவி பாலசண்முகன், ரேணுகா தனஸ்கந்தா, சாந்தி சிவக்குமார், கலாநிதி கௌசல்யா அந்தனிப்பிள்ளை ஆகியோர் நூல் விமர்சனவுரை நிகழ்த்துவர்.

நூலாசிரியர் லெ. முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார். இவ்விழவை திருமதி மாலதி முருகபூபதி, திரு. செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒழுங்குசெய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியின் 82 ஆவது வெளியீடாக ‘சொல்ல வேண்டிய கதைகள்’ பத்திக்கட்டுரைகளின் தொகுப்பு வெளியாகின்றது.

இந்நூலின் பதிப்புரையில் ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன் இவ்வாறு எழுதியுள்ளார்:

இந்த பத்திக் கட்டுரைகள் 2013 தை மாத ஜீவநதியில் வெளிவரத் தொடங்கி ஜீவநதியின் 20 இதழ்களில் தொடராக வெளியானவை. இந்த தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. முருகபூபதி தனது வாழ்வில் சந்தித்த மனிதர்கள், தன் வாழ்வியலுடன் தொடர்புடைய நிகழ்வுகள், மனதில் பதிந்த நிகழ்வுகள், சமூகத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களை சுவாரஸ்யமான மொழியில் மனதில் நிலைத்து நிற்கும் வண்ணம் தந்திருக்கின்றார். ஒவ்வொரு பத்தியில் இருந்தும் மக்களுக்கான செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. முருகபூபதி நீண்டகால இலக்கிய அனுபவம் மிக்க பல்துறை ஆற்றல் மிக்கவர். பல்வேறு இலக்கியகாரர்களுடன் தொடர்பில் இருப்பவர். தொடர்ச்சியான எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் உன்னத படைப்பாளி. பல மாநாடுகளை நடத்தியர். இலக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்து வருபர். பல்வேறு இலக்கிய பரீட்சயமிக்க இவர் பல நூல்களை வெளியிட்டு வாசகர் மனதை கவர்ந்தவர். ஜீவநதியுடன் நீண்ட காலமாக தொடர்புடையவர். முருகபூபதி அவர்களின் இந்தத் தொகுப்பும் வாசகர்களிடையே வரவேற்பை பெறும் என்ற எண்ணத்துடன், மகிழ்வுடன் இந்த தொகுப்பை வெளியிட்டு வைக்கின்றோம்.

முருகபூபதி குறித்தும் அவரது புதிய நூல் வெளியீடு - ரஸஞானி ஆவணப்படம் திரையிடல் தொடர்பாகவும் மெல்பனில் வதியும் எழுத்தாளர்கள் தெய்வீகன், மற்றும் ஜே.கே. ஆகியோர் தமது முகநூல் வாயிலாக தெரிவித்திருப்பதாவது:

தெய்வீகன்:
படைப்புக்களை சிருஷ்டிப்பவர்களுக்கு வயதாகலாம். ஆனால், படைப்புகளுக்கு வயதாவதில்லை என்பதற்கு உதாரணமானவர் முருகபூபதி. அசுர வேகத்தில் சமகால எழுத்தாளர்களுடன் போட்டிபோட்டு எழுதிக்கொண்டிருப்பவர். அவருக்கென்று ஒரு தனியான எழுத்து உலகம் உள்ளது. அது பெரும்பாலும் அபுனைவுகளாலும் தகவல் செறிவுள்ள வரலாற்று பிரக்ஞைகளாலும் உருவானது. கடந்த காலங்களின் குறுக்குவெட்டுப்பரப்பின் மீது தான் கடந்துவந்த மனிதர்களையும் அவர்களை சுற்றிக்கிடந்த உலகத்தையும் அவற்றின் இடைவெளிகளால் தான் தரிசித்த காட்சிகளையும் அழகு குன்றாமல் திரட்டித்தருவதில் முருகபூபதி அவர்கள் கை தேர்ந்தவர். சுருக்கமாக சொன்னால் விக்கிபீடியாவுக்கு விரல்கள் முளைத்தது போல ஒரு நடமாடும் நூலகம். அவரது தனித்துவமே வேகமாக எழுதிக்கொள்வதுதான். என்ன எழுதுகிறார் என்று கேட்டு அறிவதற்குள், இன்னொரு புதிய தொடரை ஆரம்பித்து ஐந்தாறு பகுதிகள் எழுதி முடித்துவிடுவார். அண்மையில் 'காலைக்கதிர்' பத்திரிகைக்கு அவர் எழுதத் தொடங்கிய 'இலங்கையில் பாரதி' என்ற நாற்பது வார தொடர் நிறைவடைந்து, அது தற்போது புத்தகமாகிக்கொண்டிருக்கிறது. அதைவிட, தான் கடந்துவந்த பெண் ஆளுமைகளை பற்றிய தலையணை சைஸ் புத்தகம் ஒன்றையும் தொகுத்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அண்மையில் இலங்கைக்கு போய் வந்த தனது அனுபவத்தை 'பயணியின் பார்வையில்" என்ற தொடராக இதுவரைக்கும் இருபது கட்டுரைகள் எழுதிவிட்டார். இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மெல்பேர்னில் வெளிவந்துகொண்டிருக்கும் 'எதிரொலி' பத்திரிகையில் 'கங்காரு நாட்டு காகிதம்' என்ற தொடரை ஒவ்வொரு மாதமும் எழுதிக்கொண்டிருக்கிறார். இப்போது 'ஜீவநதி' இதழில் எழுதிய தனது தொடர்களை தொகுத்து 'சொல்லவேண்டிய கதைகள்' புத்தகத்தை கொண்டுவந்திருக்கிறார். இந்த வயதில் அநேகமானவர்கள் மாத்திரைகளை எண்ணி எண்ணி விழுங்குவார்கள். ஆனால், இவரோ புத்தகங்களை விரல் மடித்து மடித்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வளவு சுறுசுறுப்போடு இயங்கும் தகவல் களஞ்சியம். இவருக்கு கிடைத்த பெரு வரம் என்றால் இவரது ஞாபக சக்திதான். நான் நெருங்கி பழகிய ஈழவேந்தன் ஐயா, அருண்மொழிவர்மன், வித்தியாதரன் ஆகியோரில் அவதானித்ததுபோல முருகபூபதி அவர்களுக்குள்ள ஞாபகசக்தி என்பது கிடைத்தற்கரிய பெருங்கொடை.

முருகபூபதி அவர்களின் 'சொல்லவேண்டிய கதைகள்" நூல் வெளியீட்டு நிகழ்வும் அவரைப்பற்றி "ரஸஞானி" என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ஆவணப்பட வெளியீடும் எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பேர்னில் நடைபெறவுள்ளது. ஆவணப்படத்தை மெல்பேர்னை சேர்ந்த எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி இயக்க, மூர்த்தி அவர்கள் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நவராத்திரி காலப்பகுதியாதலால் கொக்கரக்கோ ஐட்டங்கள் ஒண்டும் கிடைக்காதாம். மென்வலுவுடன் உண்ணக்கூடிய வடை உட்பட சில சுயேட்சையான சுவைதரு பண்டங்கள் ஓடர் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு மாலைப்பொழுதை கொண்டாடுவோம் வாருங்கள்!

ஜே.கே.:
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லெ. முருகபூபதி எழுதிய “சொல்லவேண்டிய கதைகள்” என்கின்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை இடம்பெற இருக்கிறது. முருகபூபதி நிறைய அனுபவங்களைச் சுமந்து திரிபவர். அவர் அவற்றைச் சொல்லும்போது ஒருவித பத்திரிகைத் துணுக்குத்தனம் தொனிக்கும். பெரும்பாலும் புனைவு கலக்காமல், முன்முடிபுகள் சேர்க்காமல் செய்தியாகவே அனுபவங்களை முருகபூபதி சொல்வார். ஒரு அனுபவத்தைப் பகிரும்போது மூலச் செய்தி என்று ஒன்று இருக்குமல்லவா? ஏனைய விடயங்கள் எல்லாம் அந்த மூலச் செய்தியைச் சுற்றி, அல்லது அதனை நோக்கியே நகருவதுண்டு. ஆனால் முருகபூபதியின் அனுபவப்பகிர்வுகள் அப்படியானவை அல்ல. செய்தியின் மூலம் என்பது அவருக்கு எந்நேரமும் நகர்ந்துகொண்டே இருக்கும். அல்லது பல மூலங்களின் வழியே செய்தி கடத்தப்படும். அல்லது ஒரே மாட்டை முருகபூபதி பல மரங்களில் கட்டிவிட்டுப் பல மரங்களைப்பற்றிப் பேசுவார். மாடும் அவ்வப்போது வந்து வந்து போகும். இதன் சிறப்பு என்னவென்றால், அவரே அறியாமல், உணராமல் பல பொக்கிசங்கள் அவர் பேச்சின்வழி வந்து வீழும். அதற்காகவே அவரின் கதைகளை நான் குறுக்கிடாமல் தொடர்ந்து கேட்பதுண்டு. முருகபூபதியின் “சொல்லமறந்த கதைகள்” தொகுதி எனக்கு மிக நெருக்கமான ஒன்று. அதன் வெளியீட்டு நிகழ்வில் நூலைப்பற்றிப் பேசியும் இருக்கிறேன். அதில் உள்ள “வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை” என்கின்ற கட்டுரை மிக ஆழமானது. கல்லை நகர்த்திப்போடுவது. எழுபதுகளில் ஜே.வி.பி எழுச்சியின்போது அவர்களுடைய பிரசாரமேடைகளில் பங்குபற்றிய அனுபவம், எண்பதுகளில் நீர்கொழும்பு, கொழும்பு பத்திரிகையாளர் வாழ்க்கை எல்லாமே சுவாரசியமானது. முக்கியமானது.

முருகபூபதியின் ஞாபகசக்தியும் அபாரமானது. எல்லா எழுத்தாளர்கள், நண்பர்களின் படங்களையும் அவர் தன்னுடைய கணினியில் சேகரித்து வைத்திருக்கிறார். அதனாலேயே யாராவது இறக்கும்போது இரங்கல் கட்டுரை, கல்வெட்டு எழுதுவதற்கு முருகபூபதியை எல்லோரும் நாடுவதுண்டு. ஒருமுறை அவருடைய கணினியை நோட்டம் விட்டபோது என்னுடைய படம் ஒன்றும் சிரித்துக்கொண்டிருந்தது. அப்படி என்னதான் எழுதுவார்? “அன்புத்தம்பி ஜேகேயின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு ....”. அபத்தம் அங்கிள். “சொல்லவேண்டிய கதைகள்” நூலை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். வாசிப்பில் ஆர்வம் மிகுந்த மெல்பேர்ன் அக்காமார்கள் நால்வர் பேசப்போகிறார்கள். கலக்குங்கோ.

நூல் வெளியீட்டோடு முருகபூபதி பற்றிய ஆவணப்படம் ஒன்றும் வெளியாகிறது. ‘ரஸஞானி’ என்கின்ற இந்த ஆவணப்படத்தை இரண்டு மூர்த்திகள் தயாரித்து இயக்கியிருக்கிறார்கள். ஒருவர் ‘மறுவளம்’ எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி. மற்றையவர் புத்தகவிரும்பியும் ஒளிப்பதிவாளருமான மூர்த்தி. இருவரையுமே தனிப்பட்டரீதியில் அறிவேன். அவர்கள் இந்த ஆவணப்படத்தை எவ்வளவு சிரத்தையோடு தயாரித்தார்கள் என்பதையும் அறிவேன். காய்த்தல் உவத்தல் இன்றி, பயிர், களை என்ற வேறுபாடு பாராது எல்லாவற்றுக்கும் பெய்யும் மழைதான் முருகபூபதி. அவருக்கான ஒரு நன்றி சமர்ப்பணமே இந்த ஆவணப்படம். அதற்காக இரண்டு மூர்த்திகளுக்கும் அன்புகலந்த முத்தங்கள். நானும் இதில் இரண்டு நிமிடங்கள் பேசியிருக்கிறேன். எடிட்டிங்கின் பின்னர் இரண்டு மூன்று செக்கனாவது தேறியிருக்கும் என்று நம்புகிறேன். சனி மாலையை எதிர்பார்த்து.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R