நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!

நண்பர்களே, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களை விட தன்னார்வலர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று மீட்பு படையில் இருந்த நண்பர் ஒருவர் சொன்னதாக கேள்விப்பட்டேன். சென்னை மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உடனடி நிவாரணமாக உணவும், தண்ணீரும் இன்ன பிறவும் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் சில நாட்களில் வெள்ள நீர் முற்றிலும் வடிந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும்போது, அவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இருக்கப்போவது இல்லை. குறிப்பாக கல்வி, உணவு சமைக்க தேவையான பொருட்கள், அரிசி பருப்பு, மாற்றுவதற்கு உடை போன்றவை கூட அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. மக்களுக்கு இந்த உடனடி நிவாரணம் அளித்த நிறுவனங்கள், தனி நபர்கள், அரசு அமைப்புகள் அனைத்தும் மெல்ல மெல்ல அவர்களை மறந்துவிடும். ஆனால் அடுத்த சில மாதங்கள் கழித்தும் கூட அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது. அதற்கு நாம் தொலைநோக்கு அடிப்படையில் சிந்திக்க வேண்டும். சென்னை, கடலூர் இரண்டு மாவட்டங்கள்தான் இந்த பெருமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடனடி நிவாரணங்களை தாண்டி, தொலைநோக்கு பார்வையுடன் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிராமங்கள் அல்லது தெருக்களில் இருந்து சில குடும்பங்களை தத்தெடுத்து அவர்களுக்கு உதவும் செயல் திட்டட்டத்தை தமிழ் ஸ்டுடியோ நடத்தவிருக்கிறது. இதன்படி, நல்ல மனம் படைத்த ஒவ்வொரு நபரும் ஒரு குடும்பத்தை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் அந்த குடும்பத்திற்கு ஓராண்டிற்கு தேவைப்படும் அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, உடை போன்ற வசதிகளை செய்துக் கொடுக்க வேண்டும். இதில் ஒருவரே மூன்றையும் செய்துக் கொடுக்க வேண்டியத் அவசியம் இல்லை. யாரால் என்ன முடியுமோ அதனை செய்துக் கொடுக்கலாம். ஒருவரால் மூன்றையும் செய்துக் கொடுக்க இயலும் என்றால் நிச்சயம் செய்யலாம். அல்லது ஒருவர் அந்த குடும்பத்தில் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி தேவைகளில் பங்கெடுக்கலாம். இன்னொறுவர் உணவு அல்லது உடை தேவைகளில் பங்கெடுக்கலாம். இவைகளை தாண்டி குடும்பங்களுக்குத் தேவையான சில பொருட்களையும் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அடுப்பு, சமைக்க வேண்டிய பாத்திரங்கள் முதலியவை இதில் அடங்கும். தமிழ் ஸ்டுடியோ அப்படியாக சென்னையிலும் கடலூரிலும் குடும்பங்களை தத்தெடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்படவிருக்கிறது. ஓராண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்டத் தேவைக்கு இவ்வளவு பணம் அல்லது பொருட்கள் தேவை என்கிற கணக்கெடுப்பை முடித்துவிட்டு மீண்டும் நண்பர்களிடம் பகிர்கிறேன். இந்த தத்தெடுக்கும் செயல்பாட்டில் நண்பர்களும் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
தமிழ் ஸ்டுடியோவுடன் இணைந்துதான் என்றில்லை, இந்த செயல்திட்டத்தை நண்பர்கள் தனித் தனியாகவும் செயல்படுத்தலாம். தேவை உள்ளவர்களை இனங்கண்டு அவர்கள் மீண்டு வர நம்மால் இயன்ற உதவிகளை செய்யலாம்.

தவிர கலை மக்களுக்கானது அதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீள்வதற்கே சில மாதங்கள் ஆகும் என்கிற நிலையில் இங்கே கலை மற்றும் கலாச்சார செயல்பாடுகளுக்கு உடனடி தேவை இல்லை. எனவே படச்சுருள் ஜனவரி மாத இதழ் வெளிவராது. தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் உள்ளிட்ட மற்ற நிகழ்வுகளும் டிசம்பர் மாதம் நடைபெறாது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தமிழ் ஸ்டுடியோ இயக்கமும் தன்னால் இயன்ற வரையில் களத்தில் இன்று அவர்களுக்காக களப்பணியாற்றும்.

contact: 9840698236

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.