- இரா. முத்துப்பாண்டி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழவேள்; உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர் மக்களின் அனுபவத்தால், நெறிமுறையால் விளைந்த கருத்துக்களின் தொகுதி அறமாகும். அறக்கருத்துக்கள் மக்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து வாழ்வை செம்மையுறச் செய்கின்றன. அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெரு வழக்காக வழங்கப்பட்டு வருகின்றன. தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும் குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன. வீடாக இருந்தாலும் நாடாக இருந்தாலும் அறத்தின்படியே விளங்க வேண்டும். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை சிலப்பதிகார பாடல் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

 எக்காலத்தும், எல்லோராலும் போற்றப் பெறும் சிறப்பு வாய்ந்த அறநெறிதான் அரசுக்கு வெற்றிதருவதாகும். அறநெறியை மறந்த அரசு - அறத்தைக் கைவிட்ட அரசு நிலை கொள்ளாது. தலை சாய்ந்து தரைமட்டமாகி அழிந்துவிடும். எனவே, கொடுமை செய்த ஒருவரை, இவர் நம் உறவினர் என்றெண்ணித் தண்டிக்காமல் விடக்கூடாது. பிறர் என்பதற்காக நல்லோராயுள்ளவரைத் தண்டீத்துவிடக் கூடாது,

எவராயிருப்பினும் நடுநிலை நின்று கோல் கோடது முறை செய்தல் வேண்டும்.  ஆண் பெண் இருவரும் அறத்தின்வழி நிற்றல் இல்லத்தின் மேன்மைக்கும் நாட்டின் உயர்வுக்கும் வழிவகுக்கும். “

கலித்தொகையில் வீட்டையும் நாட்டையும் பற்றியுமான பல அறக்கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒரு பொருளைத் தமக்கு உதவியவர் வருந்தி வாடும் நாளில் அவருக்குத் தாமும் ஒன்று தந்து நன்றியுடன் மீண்டும் உதவும் பெருந்தன்மை வேண்டும் என்பதை,

  'முன்ஒன்று தகமகுஆற்றி, முயன்றவர் இறுதிக்கண்
  பின்ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடை யாளர்போல்,'

என்னும் வரிகள் அறிவுறுத்துகின்றன. அறிஞர் தன் செயலை முடிக்கும் காலம் வரும்வரை அடங்கியிருப்பர் என்பதை, ஆன்றவர் அடக்கம்போல் என்னும் வரி புலப்படுத்துகிறது. கொடைத் தன்மையானது அனைவருக்கும் வந்துவிடாது. ஒரு சிலருக்கே இக்குணம் வாய்க்கப்பெறும். நிலையாமையை உணர்ந்தவருடைய கொடையே எல்லார்க்கும் பயன்படும். இதை, உணர்ந்தவர் ஈகைபோல் என்னும் வரி கூறுகின்றது. புகழ் வந்து சேரும்பொழுது தலைக்கனம் கொண்டு ஆடக்கூடாது. உண்மையில் புகழ் வந்து சேருமானால் சான்றோர் தலைசாய்த்து நிற்பர் என்பதை, 'தம்புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து' என்னும் வரி அறிவுறுத்துகின்றது.

  'தீதிலான் செல்வமும்
  மடியிலான் செல்வமும்'

தழைத்துப் பெருகும், சிறியவன் செல்வம் சேர்ந்தாரைப் பாதுகாவாது. வறியவன் இளமையும் இரப்பவன் நெஞ்சமும் அழகு இழக்கும். நட்பாய் இருக்கும் காலத்தில் ஒருவரது இரகசியமான செய்திகளை அறிந்துகொண்டுஇ பின்னர் இருவரும் பிரிந்த காலத்தில், அந்த இரகசியங்களை பிறருக்கு உரைத்து வெளிப்படுத்தும் பெருமையற்றோரின் தொடர்பு இழிந்தது. இதனை,
 
  'சிறப்புச் செய்து, உழையராப், புகழ்பேத்தி, மற்றுஅவர்
  புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்பு'

என்னும் வரிகள் உணர்த்துகின்றன. உறவினரையெல்லாம் கெடுத்து வாழ்பவனின் சொத்து நிலைபெறாது என்னும் கருத்தை, 'கிளைஅழிய வாழ்பவன் ஆக்கம்போல்' என்னும் வரி உணர்த்துகின்றது. நல்ல நெறியுடையவர் சொற்களைப் பேசும்போதுஇ தாய் உயிர் பெய்து பெறும் குழந்தையைப்போல அதனைக் கருத்துடன் பேணுவர். ஒன்றைச் சொல்லிவிட்டுப் பின் அதனை மறந்து வேறொன்றுக்குத் தாவிச் செல்லவே மாட்டார்கள் என்னும் உயரிய கருத்தை,

  'தாய் உயிர் பெய்த பாவை போல,
  நலன்உடையார் மொழிக்கண் தாவார்.'
 
என்னும் வரிகள் இயம்புகின்றன. வேந்தனின் வெண்கொற்றக்குடை அறனிழலாகும் ; செங்கோல் பொய்யாமை நுவலும்; முரசு பாதுகாப்பை ஒலிக்கும். மிகுந்த கொடும்போரில், வாள் எல்லையில் வந்து அகப்பட்டவனை ‘என் நிலைக்குத் தகுதியற்றவன் இவன்; இவனைக் கொல்லேன்’ என விட்டுச் செல்பவனே உண்மையான வீரனாவான். மாறாக தன் நிலைக்கு ஒப்பாகாதவனை வெட்டி வீழ்த்துவது வீரமன்று என்பதை,

  'மீளும் புகர்ஏற்றுத் தோற்றம்காண் - மண்டு அமருள,
  வாளகப் பட்டானை ‘ஒவ்வான்’ எனப்பெயரும்
  மீளி மறவனும் போன்ம்.'
  
என்னும் வரிகள் அறிவுறுத்துகின்றன. ஆற்றுதல்’ என்று சொல்லப்படுவது, வறுமையுற்று இருப்பவர்களுக்கு ஒன்றைக் கொடுத்து உதவுதல்; ‘போற்றுதல்’ என்பது கூடி உறவு கொண்டவரைப் பிரியாதிருத்தல்;; ‘பண்பு என்பது, உலக நிலைமையறிந்து நடத்தல்;; ‘அன்பு‘ என்பது, தன் சுற்றத்தினரைக் கோபியாது இருத்தல்;; ‘அறிவு‘ என்பது, அறிவற்ற பேதையர்களின் சொல்லைப் பொறுத்துக் கொள்ளுதல்; ‘செறிவு‘ என்பது கூறியதொன்றைத் தாம் என்றும் மறுத்து நடவாதிருத்தல் ‘நிறை’ என்பது, மறைவான செயல்களைப் பிறர் அறியாது காத்தல்; ‘முறை’ என்பது, தீங்கு செய்தார் தமராயினும் கண்ணோட்டமின்றி அவர் உயிரையும் வாங்கிவிடுதல். ‘பொறை’ என்பது, தன்னைப் போற்றாதாரிடமும் பகை கொள்ளாது பொறுமையொடு இருத்தல் என்பன போன்ற தத்துவ சிந்தனைகள் கலித்தொகையில் இடம்பெற்றுள்ளன. இதனை,

  ‘ஆற்றுதல்’ என்பது ஒன்றலந்தவர்க்கு உதவுதல்;
  ‘போற்றுதல்’ என்பது புணர்ந்தாரைப் பிரியாமை; ;
  ‘பண்பு‘ எனப்படுவது, பாடறிந்து ஒழுகுதல்; ;
  ‘அன்பு’ எனப்படுவது, தன்கிளை செறாஅமை ;
  ‘அறிவு’ எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்;
  ‘செறிவு’ எனப்படுவது, கூறியது மறாஅமை ;
  ‘நிறைவு‘ எனப்படுவது, மறைபிறர் அறியாமை ;
  ‘முறை’ எனப்படுவது, கண்ணோடாது உயிர்வெளவல்; ;
  ‘பொறை’ எனப்படுவது, போற்றாரைப் பொறுத்தல்; ;

என்ற கலித்தொகை வரிகள் உணர்த்துகின்றன.

சங்கச் சான்றோர்கள் நல்ல சிந்தனைத் தெளிவும் தேற்றமும் பெற்றிருந்த நிலையில்தான் சங்க இலக்கியங்கள் அவற்றைப் பிரதிபலித்துத் தெளிவான எண்ணங்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளையும் கொண்டு விளங்குகின்றன. அது கலிப்பாடல்களாயினும் அல்லது பிற வகைப் பாடல்களாயினும் சரி, எல்லாப் பாடல்களிலும் பொதுவாக இப்பண்பைக் காணமுடியும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.